காவிரி: மத்திய அரசு அலுவலங்களுக்கு திரும்பும் திசையெங்கும் பூட்டு… வலுக்கும் எதிர்ப்புகள்!

ராமேஸ்வரம் : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்காத தமிழக அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரயில் மறியல் போராட்டத்தை நடத்தி வருகிறது. சென்னை பேசின் பிரிட்ஜில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரயில்வே துறைக்கு தமிழகத்தில் இருந்து இருக்கும் எதிர்ப்பு என்ன என்பதை வெளிப்படுத்தும் விதமாகவே ரயில் மறியல் போராட்டம் நடப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

கோவை, திருச்சி ரயில் நிலையங்களின் வாயிலிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கடலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினரும் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வந்தவாசியில் தபால் நிலையத்துக்கு நாம் தமிழர் கட்சியினர் பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே கடலூரில் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நாம் தமிழர் கட்சியினர் பூட்டு போட் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மதுரையில் வருமான வரித்துறை அலுவலகத்திறகு நாம் தமிழர் கட்சியினர் பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர்.

tamil.oneindia.com

TAGS: