1969-ஆம் ஆண்டு தொடக்கம், முதல் முறையாக ‘ராக்கெட்’ தீபகற்பத்தில் இல்லை

மலேசியாவில் மிகவும் பிரபலமான அரசியல் கட்சி சின்னங்களில் ‘ராக்கெட்’ ஒன்றாகும், மேலும் 1969-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலிலும் இச்சின்னம் தோற்றமளிக்கிறது.

இருப்பினும், எதிர்வரும் பொதுத் தேர்தலில், அக்கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்த போவதில்லை என்பதை ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் உறுதிப்படுத்தினார்.

இன்று, நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில், டிஏபி 14-வது பொதுத் தேர்தலில் கூட்டு சின்னத்தைப் பயன்படுத்த ஒப்புக்கொண்டதை அவர் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த முடிவு சரவாக் மற்றும் சபா மாநிலங்களுக்கு உட்பட்டது அல்ல, அவர்களின் சுயாட்சி காரணமாக என்றும் லிம் விளக்கப்படுத்தினார்.

இம்முடிவு பழைய ஆதரவாளர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் லிம் ஒப்புக் கொண்டார்.

“அந்தத் தாக்கத்தை எங்களால் மறுக்க முடியாது, ஆனால் பிஎன் உடனான ஒரு போட்டியை நடத்துவது மட்டுமல்லாமல், பி.என்.-க்கு எதிராக ஒரே சின்னத்தை வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது, ஏனென்றால் ஜனநாயக மற்றும் நியாயமான முறையில் பக்காத்தான் ஹராப்பானைப் பதிவு செய்வதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை.

“எங்களுக்கு வேறு வழியில்லை,” என்று அவர் கூறினார்.

இது கடுமையான முடிவு என்று கூறியதுடன், டிஏபி தனது சொந்த சின்னத்தை உபயோகிக்காமல், முதல் முறையாக தேர்தலில் போட்டியிடவுள்ளது என்றார் லிம்.

“இது எனக்கு எளிதானவொரு முடிவு அல்ல, ஏனெனில் தலைமைச் செயலாளர் என்ற வகையில், முதல் முறையாக ராக்கெட் சின்னத்தைப் பயன்படுத்தாமல், நான் தேர்தல் களத்தில் இறங்க உள்ளேன், இது எளிதாக ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றல்ல,” என்று அவர் கூறினார்.

நாளை, ஜொகூர், பாசீர் கூடாங்கில், பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதிர் முகமட் ஒரு விழாவில் கலந்துகொண்டு, ஹராப்பானுக்கான பொதுச் சின்னத்தை அறிமுகம் செய்யவுள்ளார்.

முன்னதாக, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஹராப்பான் பிகேஆர் சின்னத்தைப் பயன்படுத்தக்கூடும் என்று மலேசியாகினி அறிவித்தது.

கோலாலம்பூரில், மலேசியாகினி மேற்கொண்ட ஓர் ஆய்வில், டி.ஏ.பி. ஆதரவாளர்கள் பலர், பிகேஆர் சின்னத்தை அறிந்திருக்கவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.