ராய்ஸ் : ஆர்.ஓ.எஸ். ஜனநாயகத்தைப் ‘படுகொலை’ செய்கிறது

பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியை (பெர்சத்து), தற்காலிகமாகக் கலைத்த சங்கங்கங்கள் பதிவு இலாகாவின் (ஆர்.ஓ.எஸ்.) செயலுக்குப் பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ரஃபீடா அஸிஸ்-இன் கடுமையான விமர்சனத்திற்குப் பின்னர், டாக்டர் ராய்ஸ் யாத்திம், பெர்சத்து கட்சியின் தற்காலிக கலைப்பை அறிவிக்க ஆர்.ஓ.எஸ். ஒரு பத்திரிக்கையாளர் மாநாட்டை ஏற்பாடு செய்யவேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

நாடு 14-வது பொதுத் தேர்தலை (ஜிஇ) எதிர்நோக்கி இருக்கும்போது, அந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என்றும் முன்னாள் தகவல் அமைச்சருமான அவர் சமூக ஊடகம் ஒன்றில் விளக்கியுள்ளார்.

“பெர்சத்துவின் தலைமை செயலாளரை அழைத்து விளக்கம் கொடுத்தால் போதாதா?” என்று அவர் நேற்றிரவு தனது டுவிட்டர் வாயிலாக கேள்வி எழுப்பியிருந்தார்.

அரசியல் காரணம் ஏதுமில்லை

ஏப்ரல் 5, 2018 தொடக்கம், சங்கங்கள் சட்டம் 1966, பிரிவு 14 (5)-ன் கீழ் அக்கட்சி தற்காலிகமாக கலைக்கப்படுவதாக, ஆர்.ஓ.எஸ்.-இன் தலைமை இயக்குநர் சூரயாத்தி இப்ராஹிம் நேற்று புத்ராஜெயாவில், ஒரு பத்திரிக்கை சந்திப்பை ஏற்பாடு செய்து அறிவித்தார்.

கட்சி நிர்வகிக்கப்படும் முறையில் அதிருப்தி அடைந்த உறுப்பினர்களிடமிருந்து 428 புகார்களை ஆர்.ஓ.எஸ். பெற்றுள்ளதே இதற்குக் காரணம், மற்றபடி அரசியல் நோக்கம் எதுவுமில்லை என்றும் அவர் கூறினார்.

பெர்சத்து மேல்முறையீடு செய்ய 30 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுராயாத்தி தெரிவித்தார். எனினும், பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், ஆர்.ஓ.எஸ். நிரந்தரமாக பெர்சத்து கட்சியைத் தடை செய்யும்.

ஆர்.ஓ.எஸ். நடவடிக்கையில் ஏதோ தவறு இருப்பதுபோல் உணர்ந்ததாக ராய்ஸ் கூறினார்.

“பிரிவு 14 (5)-ஐ, ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் ஒரு கத்தியாக மாற்றத் தேவையில்லை. உண்மையில் ஏதோ தவறு உள்ளது,” என சட்டப் பின்னனி கொண்ட அவர் கூறினார்.