பங்களா-கேட் வழக்கு தள்ளிவைப்பு

பினாங்கு   உயர்  நீதிமன்றம்   பினாங்கு   முதலமைச்சர்  லிம்  குவான்   எங்   மீதான  வழக்கை   மே  21க்கு ஒத்திவைத்தது.

விசாரணையை    ஒத்திவைத்த   உயர்  நீதிமன்ற   நீதிபதி   ஹதாரியா   சைட்  இஸ்மாயில்,  14வது பொதுத்  தேர்தல்  தொடர்பான  வேலைகள்  காரணமாக  லிம்  இன்று   நீதிமன்றம்  வரவில்லை   என்பதால்   இந்த   ஒத்திவைப்பு    அவசியமாகிறது  என்றார்.

நீதிமன்றம்  விசாரணையைத்   தொடங்கியபோது  லிம்மின்     வழக்குரைஞர்   கோபிந்த்   சிங்    அதிகாரப்பூர்வ   வேலைகள்   இருப்பதால்  லிம்  இன்று   நீதிமன்றத்துக்கு  வரமாட்டார்   என்று  கூறி   அதற்காக  மன்னிப்பு   கேட்டுக்கொண்டார்.

இன்று  பிற்பகல்   சட்டமன்றத்தைக்    கலைக்க   வேண்டியிருப்பதால்  லிம்   அதற்கான  ஏற்பாடுகளைச்  செய்ய   வேண்டியுள்ளது    என்றும்  வழக்கை  மே   மாதத்துக்குத்   தள்ளிவைப்பது    நல்லது     என்றும்   கோபிந்த்  கூறினார்.

அதற்கு  ஆட்சேபனை   ஏதும்   உண்டா   என்று  அரசுத்   தரப்பிடம்  வினவினார்   ஹதாரியா.

அரசுத்  தரப்பு    தலைமை   வழக்குரைஞர்   மஸ்ரி  முகம்மட்  டாவுட்   பொதுத்   தேர்தல்  இன்னும்    அறிவிக்கப்படவில்லை   என்பதால்   வழக்கைத்    தொடரலாம்    என்றார்.

ஆனால்,  ஹதாரியா,  இது  ஊழல்   வழக்கு   என்றும்  லிம்  இல்லாமல்    விசாரணையைத்   தொடர  இயலாது    என்று  கூறி   வழக்கை  மே  21க்குத்   தள்ளிவைத்தார்.