நெல்லையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஓடும் பேருந்தில் இருந்து குதித்த இளைஞர் பலி

நெல்லை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஓடும் பேருந்தில் இருந்து குதித்த இளைஞர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

பாளையங்கோட்டை அருகே உள்ள கோவைகுளத்தை சேர்ந்தவர் 40 வயதான செல்வம். கூலி தொழிலாளியாக பணியாற்றும் இவர் சில நேரங்களில் டிரைவர் வேலையையும் செய்து வந்தார்.

ஆனால் செல்வம் தினமும் மது அருந்துவார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி செல்வம் மது போதையில் இருந்தபோது, நெல்லை சந்திப்பில் இருந்து கோவை குளம் செல்லும் தனியார் பேருந்தில் ஏறினார்.

அருகில் இருந்தவருடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றும் பேசியபடியே வந்துள்ளார். பேருந்து டக்கரம்மாள்புரம் அருகே சென்றுபோது திடீரென செல்வம் ‘காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமையுங்கள்’ என்று உரக்க கத்தியபடியே ஓடும் பேருந்திலிருந்து கீழே குதித்தார்.

இதையடுத்து பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டு செல்வம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் செல்வம் சிகிச்சைப்பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி இளைஞர் ஒருவர் உயிரிழந்தால் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றும் கூறிப்படுகிறது.

tamil.oneindia.com

TAGS: