அரசிடம் அடிபணியாமல் தீர்வைப் பெற்றே தீருவோம்! – இது உறுதி என்கிறார் கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன்

“அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு விடாமுயற்சி செய்துகொண்டிருக்கும் முக்கிய தருணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான மக்களின் ஆதரவு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சரிந்திருக்கிறது. 75, 80 சதவீதமானோர் வாக்களித்த கூட்டமைப்புக்கு இந்தத் தடவை 35 சதவீதமான மக்கள் வாக்களித்துள்ளார்கள். அப்படியானால் மக்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. எனினும், எங்களது பக்கத்திலிருந்து நாங்கள் விட்ட தவறுகளைத் திருத்திக்கொண்டு அரசிடம் அடிபணியாமல் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றே தீருவோம். இது உறுதி.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கிலுள்ள பொது மண்டபத்தில் ஓய்வுபெற்ற தபால் அதிபர் றோ.மதுரநாயகம் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர்  மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“புதிய அரசியலமைப்பு சாத்தியமானால் உள்ளூராட்சி சபைகளுக்கு கூடுதலான அதிகாரங்கள் கொடுக்கப்படும்.

அதிகாரங்களைப் பகிர்ந்து அளிக்கின்றபோது மத்தியிலே இருப்பது மாகாணத்துக்கு மட்டுமல்ல, நேரடியாக உள்ளூராட்சி சபைக்கும் கொடுப்பதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது. மாகாண சபையின் விடயங்களைச் சட்டமாக்கும் அதிகாரம் மாகாண சபைக்கு இருந்தாலும் அதை நிறைவேற்றும் அதிகாரம் உள்ளூராட்சி  சபைகளுக்குக் கொடுக்கப்படவேண்டும் என்ற முன்மொழிவு இருக்கிறது. அதன்படி பார்த்தால் உள்ளூராட்சி சபைகளும் அரசியல் அதிகாரங்களைக் கூடுதலாகப் பிரயோகிக்கும் சபைகளாக மாறும்.

இன்றைய காலகட்டத்தில் வாக்களிக்கும் வீதம் எப்படியாக மாறியுள்ளது என்பது குறித்து நாங்களும் இப்போது சிந்தித்து வருகின்றோம்.

தேசியம் என்று சொல்லி ஒரு குறித்த இலக்கை அடைவதற்கு அந்த இலக்கை நோக்கி இருக்கிற கட்சிகளுக்கு நேரடியாக வாக்களித்து வந்த எம் மக்கள் இந்த வருடம் பல தசாப்தங்களுக்குப் பிறகு அப்படியான நிலைப்பாடு இல்லாத கட்சிகளுக்கும், தேசியக் கட்சிகளுக்கும், தேசிய கட்சிகளோடு சேர்ந்து இருந்தோருக்கும் கணிசமானளவு வாக்களித்துள்ளதைக் காணமுடிகிறது.

இது மக்களுடைய நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா  அல்லது இது உள்ளூராட்சி  சபை என்ற காரணத்தாலே தேசிய நிலைப்பாடுகளை விட்டுவிட்டு மக்கள் தங்களது பிரதேச அபிவிருத்தியை மட்டும் நோக்கி வாக்களித்துள்ளார்களா  என்பது குறித்து நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம்.

வாக்களிக்கும் முறையிலே ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக தேசிய அளவிலே நாங்கள் அரசுடன் பேரம் பேசுகின்ற சக்தி குறைகின்றதா என்ற கேள்வி எழுகின்றது. ஏனெனில், இதுவரை அரசுடன் கம்பீரமாகப் பேசுகின்றபோது மக்களின் ஜனநாயக விடயத்தில் எந்தவிதமான மாற்றமும் கிடையாது. 1956ஆம் ஆண்டிலிருந்து மக்கள் ஒரே செய்தியைச் சொல்லிவருகிறார்கள் அதிலே எந்த மாற்றமும் கிடையாது எனச் சொல்லிவந்துள்ளோம். அதை இந்த முறை தேர்தலிலே சொல்லமுடியவில்லை.

ஆகையால் இது குறித்து நாங்கள் சற்றுச் சிந்திக்கவேண்டும். எங்களது நடவடிக்கையில் ஏற்பட்ட குறைபாடு காரணமா? மக்களை சந்திப்பதில்  அவர்களின் பிரச்சினைகளை அறிவதில் நாங்கள் பின்நிற்கின்றோமா? என்பது குறித்து நாங்கள் சிந்திக்கவேண்டும்.

அரசியல் கட்சியாக எங்களது பக்கத்திலிருந்து நாங்கள் விட்ட தவறுகளைத் திருத்திக்கொள்ள முயலவேண்டும். அதனால்தான் தேர்தல் முடிந்த கையோடு நாங்கள் இந்த மக்கள் சந்திப்பை ஒழுங்குசெய்துள்ளோம்” – என்றார்.

இந்தச் சந்திப்பில் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.சா.அரியகுமார், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின்  உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

-tamilcnn.lk

TAGS: