ஷரிசாட் பண்டார் துன் ரசாக்கில் போட்டி

பண்டார்  துன்  அப்துல்  ரசாக்   தொகுதியில்   அம்னோ   வேட்பாளர்தான்  போட்டியிடுவார்   என  அக்கட்சி     வட்டாரங்கள்   உறுதிபடக்  கூறுகின்றன.

ஆனால், அவ்வேட்பாளர்   பண்டார்  துன்  ரசாக்  அம்னோ   தலைவர்   ரிஸல்மான்  மொக்தார்   அல்லர்   என்றும்  அவை    மலேசியாகினியிடம்    தெரிவித்தன.

அம்னோ  அங்கு  மகளிர்  பிரிவுத்   தலைவி  ஷரிசாட்  அப்துல்  ஜலிலைக்  களமிறக்கத்   திட்டமிடுவதாகத்     தெரிகிறது.

பலர்,  மத்திய   தலைமைத்துவத்தில்    உள்ளவர்கள்   உள்பட,   அதை   உறுதிப்படுத்தினர்.

ஆனால்,  ஷாரிசாட்டைத்   தொடர்புகொண்டு   வினவியதற்கு   அவர்  பிடிகொடுக்காமல்   பேசினார்.

“நானும்  பல   வதந்திகளைக்  கேள்விப்பட்டேன்.  எல்லாம்  வெறும்  ஊகங்களே”,  என்றார்.

அம்னோ  பண்டார்  துன்  ரசாக்   துணைத்   தலைவர்   சஹாருடின்  சைனல்   அபிடின்   அவ்விவகாரத்தை    உறுதிப்படுத்த    மறுத்தார்.  அதிகாரப்பூர்வ  கடிதம்  வந்த  பிறகே   எதுவும்  கூற  முடியும்    என்றார்.

வேட்பாளரை  உறுதிப்படுத்தும்  கடிதம்   அடுத்த   வாரம்  வரலாம்    என  அம்னோ  உயர்நிலை  வட்டாரமொன்று    தெரிவித்தது.

பண்டார்  துன்  ரசாக்கில்   காலம்காலமாக   மசீச   வேட்பாளர்  போட்டியிடுவதுதான்   வழக்கம்.  ஆனால்,    இம்முறை   அம்னோ   அங்கு   போட்டியிட   விரும்புகிறது.   வாக்காளர்களில்   50விழுக்காட்டுக்கு   மேற்பட்டவர்கள்   மலாய்க்காரர்கள்   என்பதால்   அங்கு   அம்னோ  போட்டியிடுவதே    உசிதமானது   என்பது    அதன்  வாதம்.

ரிசல்மான்   கடந்த    வாரம்   எம்ஏசிசியும்  போலீசும்   கூட்டாக     நடத்திய   அதிரடிச்   சோதனை  ஒன்றில்    கைதாகும்வரை   அவர்தான்   அங்கு   போட்டியிடுவார்   என்று  நம்பப்பட்டது.