அருட்செல்வன் : ஏழைகள் தோலின் நிறம் பார்ப்பதில்லை

பல தசாப்தங்களாக, அவரது முகம் அடிக்கடி ஆர்ப்பாட்டங்களின் போது காணப்பட்டது, தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடும் பொழுது அல்லது நகரமுன்னோடிகள் அவர்களது வீடுகள் உடைபடுவதில் இருந்து காப்பாற்ற களமிறங்கியபோது, அவரை அங்குக் காண முடிந்தது. அதன் விளைவாக, அவர் பல இரவுகளைப் போலிஸ் லாக்காப்பில் கழித்துள்ளார்.

அவர் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஓர் உணவகத்தில், பேட்டிக்காக வந்தார். ஒரு பி.எஸ்.எம். டி- சட்டை மற்றும் கட்சி சின்னம் பதித்த ஒரு மேற்சட்டை (வெஸ்ட்) அணிந்து.

அவருடைய தாடி சீர்படுத்தப்படாமல் இருந்தது சற்று அதிகமாக தெரிந்தது, 90-ம் ஆண்டுகளின் இறுதியில், ஒரு போராட்டத்தின் போது, முதல்முறையாக நாங்கள் சந்தித்தபோது இருந்தது போல் அல்ல.

ஆர்வத்துடன், அந்த மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) மத்தியச் செயற்குழு உறுப்பினரான எஸ்.அருட்செல்வனிடம், 51, சோசலிசத்தில் அவருக்கு எப்படி ஆர்வம் வந்தது என்று கேட்டேன்.

“அதை நம்புவீர்களோ, இல்லையோ, ஒரு மலாய்க்காரக் குழுதான் அதற்குக் காரணமாக இருநந்தது,” என்று அவர் கூறினார்.

“நான் பொருளாதாரத் துறையில் படித்துக்கொண்டிருந்தபோது, நானும் என் சகாக்களும் தோட்டப்புறங்களில் இலவச டியூசன் வகுப்புகளை நடத்த முடிவு செய்தோம்.

“பெரானாங்கில் (சிலாங்கூர்) ஒரு பகுதியில், தோட்டத் தொழிலாளர்கள் அவர்களின் முதலாளி ஊதியம் கொடுக்கவில்லை எனப் போராட்டம் நடத்தி கொண்டிருந்தனர், நாங்கள் அவர்களுடன் சேர்ந்து கொண்டோம்,” என்று அவர் கூறினார்.

அந்தத் தோட்டத்திற்குச் செல்ல, ஒரு மலாய் கம்பத்தைக் கடந்துதான் போக வேண்டும் என அருட்செல்வன் சொன்னார்.

“அந்த இந்தியத் தோட்டத் தொழிலாளர்களை ஆதரிக்கும் வகையில், மலாய்க்காரர்கள் தங்கள் கம்பத்து சாலையைப் பயன்படுத்த தோட்ட முதலாளிகளை அனுமதிக்கவில்லை.

“வேலைநிறுத்தம் செய்த இந்தியத் தொழிலாளர்களுக்குப் பதிலாக, மலாய் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டபோது, ‘அடுத்தவரின் சோற்றுப் பானையைத் தொந்தரவு செய்யக்கூடாது’ என்று கம்பத்து மலாய்க்காரர்கள், சக மலாய் தொழிலாளர்களை எச்சரித்தனர்.

“ஆக, தொழிலாளர் வர்க்கமும் ஏழை மக்களும் தோலின் நிறத்தைப் பார்ப்பதில்லை, மாறாக பொதுவாக அனுபவிக்கும் சிரமங்களைத்தான் அவர்கள் பார்க்கிறார்கள் என்பதை நான் அன்று உணர்ந்தேன். இந்த அனுபவம் இனம், வர்க்கம் ஆகியவற்றிலிருந்த என் பார்வையை மாற்றிவிட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.

குமார் எனக்கு உதவிசெய்யக் கற்றுக்கொடுத்தார்; நசீர் எனக்கு போராடக் கற்றுக்கொடுத்தார்

சுங்கை சிப்புட் எம்.பி. டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜ் மற்றும் கட்சியின் தேசியத் தலைவர் முகமட் நசீர் ஹஷிம் இருவரையும் தனக்கு ஊக்கம் கொடுத்த இரண்டு நபர்களாக அருள் குறிப்பிட்டார்.

“குமார் (ஜெயக்குமார்), அவர் ஓர் ‘எளிமையான’, ‘பண்பான’ மனிதர். அவரிடம் இருந்துதான் நான் ஏழைகளுக்கு உதவக் கற்றுக்கொண்டேன்.

“நீங்கள் அவருடைய வீட்டிற்குச் சென்றால், அது எவ்வளவு எளிமையாக இருக்கிறது என்பதைக் காணலாம். அவருடைய மருத்துவமனைக்குச் சென்றால், அவர் எவ்வாறு இலவசமாக மக்களுக்குச் சிகிச்சை அளிக்கிறார் என்பதை அவரது தாதி நமக்குத் தெரிவிப்பார்.”

“ஏழைகளுக்கு உதவ எப்படி போராடுவது, போலிசாரை எதிர்கொண்டு, கைதாக நேர்ந்தாலும், பயம் இல்லாமல் ஒடுக்குமுறையை எதிர்த்து போராடும் முறைகளை நசீரிடமிருந்து கற்றுக் கொண்டதாக அருள் தெரிவித்தார்.

“நசீர், நீங்கள் மக்களுக்காகப் போராடுகையில், அவர்களுக்கு முன்னால் நிற்க வேண்டாம், இது உங்களை ஓர் உயரடுக்கு நபர் போலவும் நீங்கள் மக்களை வழிநடத்துவது போன்ற பார்வையையும் உருவாக்கும் என்று கூறியுள்ளார்.

“அவர்கள் பின்னாலும் நிற்க வேண்டாம், ஒரு பாதுகாப்பான தூரத்தில் நின்றுகொண்டு, நீங்கள் அவர்களைத் தூண்டிவிடுவதைப் போல அது பார்க்கப்படும். அவர்களுக்கு அருகில் நின்று, அவர்கள் எதை எதிர்நோக்குகிறார்களோ அதை சேர்ந்தே எதிர்கொள்ளுங்கள், என்று நசீர் அறிவுறுத்தியுள்ளார்,” என்று அவர் கூறினார்.

அதிகாரத்தையும் செல்வத்தையும் அள்ளிக் கொடுக்கும் மற்ற கட்சிகளை விட்டுவிட்டு பி.எஸ்.எம்.-ஐத் தேர்ந்தெடுத்ததற்கு வருந்துகிறீர்களா, என்று கேட்டதற்கு, அருட்செல்வன் மிகவும் உறுதியாக பதிலளித்தார்:

“எங்கள் சந்தர்ப்பத்திலும் நான் வருத்தப்பட்டதில்லை, எங்களின் சந்திப்புக் கூட்டங்களுக்கு வந்து பாருங்கள், நீங்கள் வித்தியாசத்தைக் காண்பீர்கள்; நாங்கள் மலாய், சீனர், இந்தியர் என எல்லா இன மற்றும் மத பின்னணிகளிலிருந்து வந்தவர்கள், ஆனால் இனம் அல்லது மதத்தைப் பற்றி நாங்கள் ஒருபோதும் பேசுவது இல்லை.”

அருட்செல்வனைப் பொறுத்தமட்டில், தனிப்பட்ட அரசியல் ஆதாயத்திற்கு இடம் கொடுக்காத தற்போதைய அரசியல் சூழ்நிலையை அறிந்து, ஒருவர் பிஎஸ்எம்-இல் இணைகிறார் என்றால், அந்த நபர் அர்ப்பணிப்பு குணம் கொண்டவர் என்றும் போராட உறுதியாக இருக்கிறார் என்றும் அர்த்தம்.