தமிழர் எழுச்சியின் அடையாளம் கோசா!

மலாயா – சிங்கைவாழ் தமிழர்தம் நெஞ்சந்தனில் தமிழ் எழுச்சியைத் தோற்றுவித்தவர் ‘தமிழவேள்’ கோ.சா. மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் தோன்றுவதற்கு விதையாகவும் அது தோன்றியபின் அதற்கு வேராகவும் விழுதாகவும் இருந்த கோமான் கோ.சாரங்கபாணி என்னும் இந்த ‘கோ.சா.’

ஏறக்குறைய புதிய தலைமுறை மறந்துவிட்ட இந்தப் பெயர், இன்றைய தலைமுறைக்கும் இதற்கு முந்திய தலைமுறையினருக்கும் மிகவும் பரிச்சயமான பெயர். அவர் தொடங்கிய தமிழ் முரசு நாளிதழ்வழி அவர் தொடர்ந்த தமிழ்ப் பணி, அவரின் வாழ்நாளின் கடைசிக் கட்டம்வரைத் தொடர்ந்தது.

அன்றைய தஞ்சை மண்டலத்தில் இணைந்திருந்த இன்றைய திருவாரூர் மாவட்டத்தின் தலைநகரான திருவாரூர் அருகே விசயபுரம் என்று பட்டணத்தில் 1903-ஆம் ஆண்டில் இதே நாளில்(ஏப்ரல் 20) பிறந்த கோசா, விவரமும் தெளிவும் பிறக்கும் பருவமான 21 வயதில் கடல் கடந்து இந்த மண்ணுக்கு வந்தார். வந்தவர், சிங்கையில் தொடர்ந்து நிலைகொண்டாலும் மாலாயாவாழ் தமிழருக்கும் தமிழுக்கும் தொய்வில்லாத பணியைத் தொடர்ந்தார்.

மலேசியாவின் முதல் உயர்க்கல்வி நிறுவனமான மலாயாப் பல்கலைக்கழக்த்தில் தமிழுக்காக இருக்கை ஏற்படுத்திய சாதனை அவருக்கு சொந்தமானது. தமிழ்ச் சமூ­கத்­தின் உதவியை பற்றுக் கோடாகக் கொண்டு, அவர் மலாயாப் பல்­கலைக்கழகத்தில் தமிழாய்வியல் பிரிவைக்  கட்டமைத்தார்.

தொடர்ந்து பத்தொன்பது பல்கலைக்கழகங்கள் இங்கு தோற்றுவிக்கப்பட்டாலும் அவற்றில் ஒன்றில்கூட தமிழ் இருக்கையை ஏற்படுத்த நம் தலைவர்கள் தவறி விட்டனர்.

அவ்வாறு மலாயாப் பல்கலைக்கழகத்தில் நிலைகொண்டுள்ள தமிழாய்வுப் பிரிவிலும் தமிழில் முனைவர் பட்டம் பெற முடியாது என்பது பெரும் பின்னடைவாகவேக் கருதப்படுகிறது. இதற்காக குரல் கொடுப்பாரும் உரிய நடவடிக்கையை முன்னெடுப்பாரும் எவருமிலர் என்று மலாயாப் பல்கலைக்கழக தமிழாய்வியல் பிரிவின் இன்றையத் தலைவர் இரா. மோகனதாசன் அண்மையில் வருத்தம் தெரிவித்தார்.

மொழிக்கும் இனத்திற்கும் ஒரு நாளிதழை படைக் களமாக பயன்படுத்த முடியும் என்று நிறுவிய அவர், தமிழ்ச் சமூ­கத்­தோடு நெருங்­கிய உறவு கொண்­டி­ருந்தார். மொழி வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் எந்த அளவு கடப்பாடு கொண்டிருந்தாரோ அந்த அளவிற்கு சமுதாயத் தொண்டிலும் அக்கறைக் காட்டினார். குறிப்பாக, சிங்கையில் ஏராளமானோர் குடி­யு­ரிமை பெற வழி­வ­குத்­தார் அவர்.

 ‘ஞாயிறு’ நக்கீரன்