மொட்டைக் கடுதாசியால் வேட்பாளராகும் தகுதி பறிபோவதாகக் கேவி அழுத பிகேஆர் பிரதிநிதி

இரண்டு   தடவை   பிகேஆர்  ராவாங்   சட்டமன்ற  உறுப்பினராக   இருந்துள்ளவர்   கான்  பெய்  நெய்.

இம்முறை   ஒரு  மொட்டைக்  கடிதத்தால்     வேட்பாளராகும்  வாய்ப்பு   பறிபோகும்   அபாயமிருப்பதாகக்  கூறுகிறார்.    அக்கடிதம்   அவர்  தொகுதிக்கான   ஒதுக்கீட்டைத்    தவறாக   பயன்படுத்திக்கொண்டார்   எனக்  குற்றம்   சாட்டியுள்ளது.

கட்சித்   தலைமைக்கு   அக்கடிதம்   அனுப்பப்பட்டதாகவும்   குற்றச்சாட்டுக்கு  எதிராக  தம்மைத்    தற்காத்துக்கொள்ள    வாய்ப்புக்கூட    வழங்கப்படவில்லை   என்றும்   அவர்   சொன்னார்.

பிகேஆரில்   உள்ள   ஒருவர்தான்   அக்கடிதத்தை    எழுதியிருக்க   வேண்டும்   என்று   நினைக்கிறார.  ஆனால்,   யாருடைய   பெயரையும்    அவர்  குறிப்பிடவில்லை.

“ராவாங்கில்   போட்டியிட   விரும்புவோர்   அதை   எழுதியிருக்கலாம்.  என்னை  முதுகில்   குத்தி  விட்டார்கள்”,  என்று  இன்று  காலை  ராவாங்கில்   செய்தியாளர்  கூட்டமொன்றில்   கூறினார்.

கான்  எம்ஏசிசி-இடம்  புகார்   செய்யப்போவதாகவும்   தமக்கேற்பட்டுள்ள   களங்கத்தைப்  போக்கிக்கொள்ள   தேவையான   ஆதாரங்களைக்  கொடுக்கப்  போவதாகவும்   கூறினார்.

“என்  இளமைக்  காலத்தை   இந்தத்  தொகுதிக்குப்   பணியாற்றுவதில்    செலவிட்டிருக்கிறேன்.  இப்போது   அடிப்படையற்ற   குற்றச்சாட்டின்பேரில்   வேட்பாளர்   பட்டியலிலிருந்து   கழட்டி  விடப்படுகிறேன்  என்றால்    அதை  என்னால்   ஏற்றுக்கொள்ள   முடியாது.

“என்  பெயருக்கு  ஏற்பட்டுள்ள   களங்கத்தைப்   போக்கிக்கொள்ள    ஒரு  வாய்ப்பு   கொடுங்கள்   என்றுதான்   கேட்கிறேன்.  குற்றச்சாட்டு  என்னை  மட்டும்   பாதிக்கவில்லை,  என்   குடும்பத்தையும்   பாதித்துள்ளது”,  என்றார்.