காவிரி விவகாரத்தில் காலம் தாழ்த்தினால் போராட்டம் தொடரும்: வேல்முருகன் எச்சரிக்கை

ஈரோடு: காவிரி விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியாக போராட்டம் நடத்தினால் அதற்கு அனைத்து கட்சிகளும் துணை நிற்போம் என்றும் ஆனால் காலம் தாழ்த்தினால் தமிழகத்தில் போராட்டம் தொடரும் எனவும் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.

44 ஆண்டுகளாக சட்ட போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு சட்ட ரீதியாக போராட்டம் நடத்தினால் அனைத்து கட்சிகளும் துணை நிற்போம். காலம் தாழ்த்தினால் போராட்டம் தொடரும்.

பாலைவனமாகிவரும் தஞ்சை

காவிரியை வைத்து தான் தேர்தல் அரசியல் நடத்துகிறோம் என தமிழக பாஜக தலைவர் கூறும் அளவிற்கு தமிழக அரசு அலட்சியமாக உள்ளது. பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பின்பு ஆயிரத்து 600 விவசாயிகள் இறந்து உள்ளனர். தஞ்சை பாலவைனமாக மாறி வருகிறது. மீத்தேன், ஈத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ திட்டம், பெட்ரோலிய மண்டலம் என பல்வேறு திட்டங்களால் தமிழகம் கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு அநீதி

14ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து கர்நாடகா அணையில் இருந்து தேவைப்பட்டால் ராணுவ உதவியுடன் தண்ணீர் திறக்க வேண்டும். 28 லட்சம் ஏக்கர் விளை நிலங்களுக்கு 177 டி.எம்.சி தண்ணீரும், 6 லட்சம் ஏக்கர் மட்டுமே உள்ள கர்நாடகாவிற்கு 184 டி.எம்.சி தண்ணீரும் வழங்க வேண்டும் என்பது அநீதியான தீர்ப்பாகும்.

ரஜினிக்கு எந்த தகுதியும் இல்லை

நீட் தேர்வால் தமிழகத்தில் ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டது. தமிழகத்தை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் திட்டங்கள் குறித்து எவ்வித புரிதலும் இல்லாத ரஜினிகாந்த், அரசியலுக்கு வர எவ்வித தகுதியும் இல்லை. அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த பெண்கள் குறித்து கூறிய கருத்துக்கு பகிங்கரமாக மன்னிப்பு கேட்க வேண்டும். பாண்டியாறு & புன்னம்புழா திட்டம் குறித்து கள ஆய்வு செய்து உண்மை நிலையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை.

திமுவில் முனைப்பு வேண்டும்

பெண் செய்தியாளர்களை தரக்குறைவாக பேசிய எஸ்.வி.சேகரை தமிழக காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். ஆளுநர் ஆய்வு என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது. பிரதமருக்கே கருப்பு கொடி காட்டுவதுடன், இந்தியாவின் இரும்பு பெண்மணி என்றழைக்கப்பட்ட இந்திராகாந்தியையே எதிர்த்த திமுக இந்த விவகாரத்தில் இன்னும் முனைப்போடு செயல்பட வேண்டும் என்றார்.

tamil.oneindia.com

TAGS: