’’விஷாலை விரட்டுவோம்; தமிழனை தேர்வு செய்வோம்’’ – பாரதிராஜா, டி.ராஜேந்தர் ஆவேசம்

தயாரிப்பாளர் சங்கத்தேர்தல் போட்டியின்போது பேசிய நடிகர் விஷால், தேர்தலில் வெற்றி பெற்றால் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் நாங்களே பதவி விலகுவோம் என்று தெரிவித்திருந்தார். அதன்பின்னர் அத்தேர்தலில் வெற்றி பெற்று தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.

 

இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கவுன்சில் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில்,  பாரதிராஜா, டி.ராஜேந்தர், ராதாரவி, ஜே.கே.ரித்தீஸ், ராஜன் மற்றும் பல தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

ஆலோசனைக்கூட்டம் முடிந்த பின்னர் அனைவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.   அப்போது,  ’’விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அவர் ஒராண்டில் நிறைவேற்ற வில்லை என்றால் பதவி விலகுவேன் என்று கூறி இருந்தார். 2 ஆண்டுகள் ஆகியும் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை’’ அதனால் அவர் தானே பதவி விலக வேண்டும் என்றனர்.

 

மேலும்,  ’’ சினிமா ஸ்டிரைக் காரணமாக கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. விஷால் படத்துக்கு மட்டும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் கிடைக்கிறது. மற்றவர்களது படங்களுக்கு 200 தியேட்டர்கள் கூட கிடைப்பதில்லை.  விஷால் உடனடியாக பதவி விலக வேண்டும். அல்லது நாங்கள் விரட்டுவோம். புதிதாக தேர்தல் நடத்தி தமிழர்களை நிர்வாகிகளாக தேர்வு செய்ய வேண்டும்.  தமிழர்கள், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளாக வரவேண்டும்’’என்று தெரிவித்தனர்.

-nakkheeran.in