முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்: மாவை சேனாதிராஜா

“அடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக என்னைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலைப்படுத்தினால், அது குறித்து நல்ல முடிவெடுப்பேன். கடந்த முறை விட்ட தவறை இந்தத் தடவையும் விடமாட்டேன்.” என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “போரால் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைக்க தற்போதைய வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மறந்துவிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறு பின்னடைவைச் சந்தித்தமைக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயற்பாடும் ஒரு காரணம்.

போராட்டப் பாதையில் பெற்றுக்கொடுக்கமுடியாத அரசியல் தீர்வை ஜனநாயக வழியில் பெற்றுக்கொள்வதற்காக வேண்டியாவது வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவது பற்றி முடிவெடுப்பேன். பதவிக்காக அலைபவன் நான் அல்லன்.

கடந்த 2013ஆம் ஆண்டு முதலமைச்சர் வேட்பாளராக என்னை முன்னிறுத்துவதென்று கட்சி தீர்மானித்திருந்தது. பதவியைவிட மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய சிறந்த அறிவுள்ள ஒருவரை முதலமைச்சராக முன்னிலைப்படுத்த விரும்பினேன்.

போராட்ட வழியில் நான் வந்ததால் என்னைவிட சட்ட நுணுக்கங்களை அறிந்த நீதியரசர் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தலாம் என்று தெரிவித்து அவரை முதலில் அழைத்திருந்தேன். அவரும் வெற்றிபெற்றார். ஆனால், தனது சட்ட அறிவைக்கொண்டு போரால் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைக்க அவர் மறந்துவிட்டார். அரசையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் குறை கூறுவதில்தான் அவர் காலத்தைக் கழித்துள்ளார்.

எனவே, கடந்த முறை விட்ட தவறை இந்த முறையும் விடமாட்டேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடி ஆராய்ந்து என்னை வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தினால் நிச்சயமாக நல்ல முடிவை எடுப்பேன். பதவிக்காக அலைபவனாக நான் இருந்தால் 2013ஆம் ஆண்டிலேயே முதலமைச்சராக ஆகியிருப்பேன்.”என்றுள்ளார். -BBC_Tamil

TAGS: