மறைந்தார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்!

சென்னை: கடும் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல எழுத்தாளரும், வசனகர்த்தாவுமான பாலகுமாரன் மாரடைப்பால் காலமானார்.

தஞ்சை மாவட்டம் திருகாட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்ற கிராமத்தில் கடந்த 1946ம் ஆண்டு பிறந்தவர் பாலகுமாரன். நூற்றுக்கணக்கான சிறுகதைகள், இருநூற்றுக்கும் அதிகமான நாவல்களை அவர் எழுதியுள்ளார். அவர் எழுதிய நாவல்களில் மெர்க்குரி பூக்கள், இரும்பு குதிரைகள் உள்ளிட்டவை மிகவும் பிரபலம். பல்வேறு விருதுகளையும் அவர் வாங்கி இருக்கிறார்.

நாயகன், குணா, ஜென்டில் மேன் உள்ளிட்ட பல படங்களில் வசனகர்த்தாவாகவும் அவர் பணியாற்றி உள்ளார். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல உயரிய விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

71 வயதான பாலகுமாரன் சென்னையில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி திடீர் மாரடைப்பால் பாலகுமாரனின் உயிர் பிரிந்தது.

பாலகுமாரனின் இந்த திடீர் மறைவு இலக்கிய உலகில் அனைவரையும் பெரும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

tamil.oneindia.com