பெரும்பான்மை இல்லை… கோவா, மேகாலயா ‘ஆடுபுலி ஆட்டத்தை’ கர்நாடகாவில் அரங்கேற்றுமா பாஜக?

பெங்களூரு: கர்நாடகா தேர்தலில் விறுவிறுவென மகிழ்ச்சியுடன் முன்னேறிக் கொண்டிருந்த பாஜகவுக்கு தற்போதைய நிலவரம் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க 6 இடங்கள் தேவை என்பதால் கர்நாடகாவில் அரசியல் ஆட்டங்கள் களை கட்டும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

கர்நாடகா தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. ஒரு கட்டத்தில் விறுவிறுவென பாஜக முன்னேறி 120 இடங்கள் முன்னிலை என்கிற நிலை இருந்தது.

இதனால் நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் பிற்பகல் நிலவரம் பாஜகவுக்கு ஏமாற்றத்தைத்தான் கொடுத்து வருகிறது.

பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை

தற்போதைய நிலையில் பாஜக 106 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 73 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 41 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

பாஜகவுக்கு 6 இடங்கள் தேவை

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க 112 இடங்கள் தேவை. பாஜக பெரும்பான்மை பெற இன்னமும் 6 இடங்கள் தேவை. அதேநேரத்தில் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளம் கை கோர்த்தால் 114 இடங்களில் முன்னிலை என்கிற நிலை உள்ளது.

கோவா, மேகாலயா திருவிளையாடல்

கடந்த காலங்களில் கோவா, மேகாலயா மாநிலங்களில் பாஜக குறைவான இடங்களில் வென்ற போதும் பிற கட்சிகளை இணைத்துக் கொண்டு ஆட்சி அமைத்தது. அதுவும் மேகாலயாவில் காங்கிரஸ் 21; பாஜக 2 இடங்களில் வென்ற நிலையிலும் ஆட்சியை அமைத்தது.

என்ன நடக்கும்?

தற்போது அதே ஆடுபுலி ஆட்டங்களை எதிர்கொள்ள இருக்கிறது கர்நாடகா. காங்கிரஸ் அல்லது ஜேடிஎஸ் எம்.எல்.ஏ.க்களை வளைத்துப் போட்டு பாஜக ஆட்சி அமைக்குமா? அல்லது கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் பாஜகவுக்கு செக் வைக்கும் வகையில் ஜேடிஎஸ்ஸுடன் இணைந்து காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை அமைக்குமா? என்பதுதான் இப்போதைய கேள்வி.

tamil.oneindia.com

TAGS: