புதிதாக அமைக்கப்பட்டு வரும் அமைச்சரவையில் மூன்று அல்லது நான்கு இந்தியர்கள் இருக்க வேண்டும், 14 இந்திய என்ஜிஒ-கள் கோரிக்கை

 

 

பக்கத்தான் ஹரப்பான் தலைவரும் பிரதமருமான மகாதிர் “இந்தியச் சமூகத்தைச் சமூகப் பொருளியல் ரீதியில் இதர சமூகங்களுக்கு இணையாக உயர்த்துவது தன் முக்கிய இலக்குகளில் ஒன்றென” கூறியிருப்பதை வரவேற்பதாக “நாட்டின் முதன்மை இந்திய சமூக அமைப்புகள்” என்று கூறிக்கொள்ளும் 14 இந்திய என்ஜிஒ-கள் நேற்று பிரிக்பீல்ட்ஸில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறின.

தேர்தல் வாக்குறுதிகள் என்றாலே அவை நிறைவேற்றப்படும் என்பதில் மக்கள் நம்பிக்கை இழந்து நிற்கும் வேளையில், அவ்வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான பணிக்குழுவில் “பிரதமருக்கு நல்ல கருத்தாலோசனை சொல்வதற்காக நம் வலிகளையும் எதிர்பார்ப்புகளையும் பார்த்த, உணர்ந்த ஓர் இந்திய முழு அமைச்சரேனும் இடம்பெறுதல் அவசியமாகும்”, என்று அந்த 14 முதன்மை இந்திய என்ஜிஒ-களின் ஒருங்கிணைப்பாளர் க, குணசேகரன் கூறினார்.

இந்தப் பரிந்துரையை “நேற்று (மே 16, 2018) பிரதமருக்கும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள நான்கு கட்சிகளின் தலைமைகளிடமும் கடிதம்வழித் தெரிவித்து விட்டோம்”, என்று குணசேகரன் மேலும் கூறினார்.

இக்கோரிக்கையை விடுத்த 14 முதன்மை என்ஜிஒ-களின் பெயர்கள் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவை: 1) S.P. Nathan, Presiden Educational, Welfare and Research Foundation; 2) S. Pasupathy, Pengarah MySkills Foundation; 3) Datuk Dr. Achaiah Kumar, Presiden Telugu Association of Malaysia; 4) Datuk Mohan Shan, Presiden Malaysia Hindu Sangam; 5) Ragahavan Annamalai, Presiden Yayasan Penyelidikan & pembangunan Pendidikan Tamil Malaysia; 6) Grish Ramachandran, Pengarah AMMA Foundation; (7) C. Arunkumar, Presiden Majilis Belia Hindu Malaysia (HYO); (8) Saravanan M. Sinapan, Presiden DHRRA Malaysia; (9) A. Radhakrishnan, Presiden Malaysia Hindu Dharma Mamandram; (10) Gunasekaran Karupaya, Presiden Pertubuhan Titian Digital Malaysia; (11) A. Ravendran, Presiden GOPIO Malaysia; (12) S. Thiagarajan, Timb. Pengerusi Persatuan Lempaga Pengelola Tamil Perak; (13) M. Ravanan, Penasihat Thirukkural Mandram; (14) Gunasegararan Kandasamy, Penasihat Hindu Youth Organsation of Port Klang.

மலேசிய இந்தியச் சமூக அமைப்புகளின் பேரவையில் தற்போது 14 அமைப்புகள் இடம்பெற்றுள்ளன என்று கூறிய குணசேகரன், இந்த “ஒவ்வொரு அமைப்பும் நெடுங்காலமாக மலேசிய இந்தியச் சமூக நலன்களுக்காகவும் வளப்பத்துக்காகவும் பாடுபட்டு  வரும் அமைப்புகளாகும்” என்றாரவர்.

மேலும், இந்தியச் சமூகத்தின் சமூக—பொருளிய மேம்பாட்டுக்காகப் பல்லாண்டுகளாகப் பணியாற்றிய அனுபவமும் அறிவும் இந்தப் பேரவையில் அங்கம் பெற்றுள்ள அமைப்புகளுக்கு உண்டு என்றும் அவர் கூறினார்.

“அந்த அடிப்படையில், புதிய அரசாங்கத்தோடு இணைந்து இந்தியச்சமூகத்தின் சிக்கல்களைத் தீர்ப்பதில் முனைப்புடன் செயல்படத் தாங்கள் தயாராக உள்ளதாக அப்பேரவை தெரிவித்தது”, என்று குணசேகரன் மேலும் கூறினார்.

என்ஜிஒ-கள்  காக்காய் பிடிப்பதற்கு வசதியாக புதிதாக நியமிக்கப்படவிருக்கும் இந்திய அமைச்சர் யாரேனும் அடையாளம் காணப்பட்டுள்ளாரா என்ற கேள்விக்கு மௌனம் பதிலாக இருந்தது.