ஸ்ரீலங்கா இராணுவத்தினர், தமிழினப் படுகொலை செய்தது உண்மையே, அம்பலப்படுத்திய சிங்கள பெண்!

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஸ்ரீலங்கா அரச படையினரால் தமிழினப் படுகொலை நிகழ்த்தப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ணணியைச் சேர்ந்த எம்பிலிப்பிட்டிய நகர சபையின் உறுப்பினர் லசந்தி லக்மினி பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா இராணுவத்தினர் இறுதிப் போரில் அப்பாவி மக்களை படுகொலை செய்ததாக ஸ்ரீலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மையில் பகிரங்கமாகவே தெரிவித்திருந்த நிலையில் அரச தரப்பிலுள்ள மற்றுமோர் உறுப்பினர் ஒருவர் இதனை உறுதிப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றிய இரத்தினபுரி மாவட்டம் எம்பிலிப்பிட்டிய நகர சபைக் கூட்டம் நேற்று(18-05-2018) வெள்ளிக்கிழமை நகர சபைத் தலைவர் லலித் கமமே தலைமையில் நடைபெற்றது.

அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நகர சபை உறுப்பினர் கே. ருவன் பத்திரனவினால் யோசனையொன்று கொண்டுவரப்பட்டது.

இந்தப் பிரேரணை மீது உரையாற்றிய நகர சபையின் உறுப்பினர் லசந்தி லக்மினி, வன்னி இறுதிப் போரில் ஸ்ரீலங்கா படையினர் தமிழ் மக்களைக் கொத்துகொத்தாக கொன்று குவித்ததாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்வதற்கான உரிமை அந்த மக்களுக்கு இருப்பதாக கூறிய அவர், ஆயுதங்கள் ஏந்திப் போராடியவர்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைவதற்கு முழுமையான உரிமையும் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இவரது இந்த அறிவிப்பு காரணமாக எம்பிலிப்பிட்டிய நகர சபையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டதோடு உறுப்பினர் லக்மினியின் உரையை இடைநிறுத்துமாறும், ஹான்சாட்டிலிருந்து நீக்கிவிடுமாறும் சில உறுப்பினர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர்.

-athirvu.in

TAGS: