ராம்கர்ப்பால் : சிரூலை மன்னிக்கத் தேவையில்லை, வேறு சாட்சிகள் இருக்கின்றன

அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கு தொடர்பான உண்மைகளைத் தெரியப்படுத்த வேண்டுமானால், தனக்கு மன்னிப்பு வழங்க வேண்டுமெனக் கேட்கும் சிரூல் அஸாரின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்கக் கூடாது என புக்கிட் குலுகோர் எம்பி ராம்கர்ப்பால் சிங் இன்று கூறினார்.

இந்தக் கொலை வழக்கில், இன்னும் விளக்கம் அளிக்காத சாட்சிகள் பலர் வெளியே உள்ளனர் என ராம்கர்ப்பால் கூறினார்.

அல்தான்துயா குடும்பத்தைப் பிரதிநிதித்து பேசிய ராம்கர்ப்பால், சிரூலின் இந்தக் கோரிக்கை ‘பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓர் அவமதிப்பு’ என்றும் இதனை ஏற்கக்கூடாது என்றும் கூறினார்.

“சிரூல்-இன் நேர்காணலில் பரிவுணர்வு இல்லை, குறிப்பாக அப்படுகொலை மிகவும் மோசமாக நடந்தபோதும் கூட.

“மற்றவர்களைக் கொலை செய்தது மேலிடத்து அறிவுறுத்தல்கள் படி, அல்தான்துயாவைக் கொலை செய்தது மட்டுமே தான் செய்த குற்றமென முரணாக அவர் கூறியுள்ளார்,” என ராம்கர்ப்பால் கூறினார்.

2015-ல், சிரூல் மற்றும் அஷிலா ஹட்ரி இருவருக்கும் அல்தான்துயா கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டது.

2006-ல் சுட்டுக் கொல்லப்பட்டு, புஞ்சாக் ஆலாமில் வெடிவைத்து தகர்க்கப்பட்டார் அந்த மங்கோலியப் பெண்.

அவ்விரு உயர்மட்ட போலீஸ்காரர்களும், அப்போது துணைப் பிரதமராக இருந்த நஜிப் ரசாக்கிற்குத் துணை அதிகாரிகளாக இருந்தவர்கள். அக்கொலைக்கு உத்தரவிட்டது யார் என்பதை பெடரல் நீதிமன்றம் தெரியப்படுத்தவில்லை.

அஸிலா இப்போது சிறையில் இருக்கிறார், மரண தண்டனைக்குக் காத்திருக்கிறார், அதே சமயத்தில் சிரூல் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பி ஓடிவிட்டார்.

மரண தண்டனையை அங்கீகரிக்காத ஆஸ்திரேலியச் சட்டத்தின் காரணமாக, முந்தைய பிஎன் அரசாங்கம் சிரூல்-ஐ ஒப்படைக்குமாறு கேட்கவில்லை.

“இந்த வழக்கு அசாதாரணமான சூழல்களைக் கொண்டிருப்பதால், சிரூல் தனது தண்டனையை ஆயுள் முழுவதும் சிறையில் அனுபவிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து மலேசியாவிற்கு அனுப்பப்பட்டு, காஜாங் சிறைச்சாலையில் தண்டனையை அனுபவிக்க வேண்டும்,” என்று ராம்கர்ப்பால் கூறினார்.

“நாடு திரும்பியதும், தேவைபட்டால் அவரை இந்த வழக்கில் ஒத்துழைக்குமாறு நாம் வற்புறுத்தலாம்.”

“முக்கிய சாட்சி விளக்கமளிக்க அழைக்கப்படவே இல்லை”

இருப்பினும், கொலை செய்யப்பட்ட இரவில் என்ன நடந்தது, அதனை இயக்கியது யார்  என்பது சிரூல் அறியாமல் இருக்கலாம் என்று ராம்கர்ப்பால் தெரிவித்தார்.

“இக்கொலையில் பெரும்பங்காற்றியது அஷிலா என்று, விசாரணையின்போது கிடைத்த சான்றுகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

“மேலும், என்ன நடக்கிறது என்பதை டிஎஸ்பி மூசா சாப்ரி அறிந்திருக்கக்கூடும், ஆனால் வழக்கு விசாரணையின் போது அவர் வரவழைக்கப்படவில்லை.

“அப்துல் ரசாக் பகிண்டா ஒரு முக்கிய சாட்சியாக இருக்கக்கூடும். இந்த வழக்கில் சிரூல்லின் கூற்று அஸிலா அல்லது பிறர் கூறிய கருத்துக்களின் அடிப்படையிலேயே இருக்கலாம்,” என்று அவர் கூறினார்.

இந்த வழக்கு விசாரணை மீண்டும் திறக்கப்பட வேண்டும் அல்லது ஆர்.சி.ஐ. அமைத்து இக்கொலைக்கான நோக்கம் விசாரிக்கப்பட வேண்டும் என்று ராம்கர்ப்பால் பரிந்துரைத்தார்.

“இக்கொலைக்குப் பொறுப்பானவர்கள் எந்தப் பதவியில் அல்லது நிலையில் இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல், நீதியின் முன் கொண்டுவரப்பட்டு, அவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்,” என்று ராம்கர்ப்பால் கூறினார்.