ஸ்டெர்லைட்டுக்கு எதிரான கிளர்ச்சி- 100- நாட்களாக நீடிப்பு-நாளை முற்றுகைப் போராட்டம்-144 தடை உத்தரவு

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நாளை தூத்துக்குடியில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முற்றுகைப் போராட்டத்தை தடுத்து நிறுத்த போலீஸ் குவிக்கப்பட்டிருப்பதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் தூத்துக்குடியில் இன்று இரவு 10 மணி முதல் மே 23-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வேண்டும் என்பது 24 ஆண்டு கால போராட்டம். தற்போது ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் என்ற பெயரில் கிராமங்களை ஆக்கிரமிக்க முயன்றது.

இதையடுத்து கிளர்ந்தெழுந்த கிராம மக்கள் தன்னெழுச்சி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். குமாரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராம மக்களின் போராட்டம் நாளை 100-வது நாளை எட்டுகிறது.

தூத்துக்குடியில் நாளை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் பள்ளி வளாகம் ஒன்றில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு நிகழ்ச்சி நடத்த மட்டும் போலீஸ் அனுமதி அளித்துள்ளது.

இதனிடையே தூத்துக்குடியில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த வணிகர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இப்போராட்டங்களை ஒடுக்குவதற்காக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இரவு 10 மணி முதல் மே 23-ந் தேதி வரை 144 தடை உத்தரவு தூத்துக்குடியில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலரும் கைது செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தூத்துக்குடியில் பதற்றம் நீடிக்கிறது.

tamil.oneindia.com

TAGS: