நஜிப்பின் வழக்குரைஞர்கள் விசாரணைக்கு முன்னர் விலகிக் கொண்டனர்

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இன்று மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தால் (எம்எசிசி) விசாரிக்கப்படவிருக்கும் நேரத்தில் அவரது வழக்குரைஞர் ஹர்பால் சிங் கிரிவால், நஜிப்பின் வழக்குரைஞராக செயல்படுவதலிருந்து விலகிக் கொண்டார்.

நேற்றிரவு நஜிப்பை அவரது தாமான் டூதா இல்லத்தில் சந்தித்தப் பிறகு தாம் நஜிப்பின் வழக்குரைஞராக இருப்பதலிருந்து விலகிக் கொண்டதை ஹர்பால் உறுதிப்படுத்தினார் என்று பெரித்தா ஹரியான் செய்தி கூறுகிறது.

“ஆம், நான் நஜிப்பின் சட்டப் பிரதிநிதியாக இருப்பதலிருந்து விலகிக் கொண்டேன்.

“மேலும், எனது பங்காளி எம். ஆதிமூலன் கூட விலகிக் கொண்டார்”, என்று அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

தாங்கள் சொந்தமாக விலகிக் கொண்டதாகவும், தங்களை நஜிப் விலக்கவில்லை என்றும் ஹர்பால் கூறினார்.

நஜிப்பை முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் முகமட் யுசோப் ஸைனால் அபிடினின் வழக்குரைஞர் குழாம் பிரநிதிக்கும் என்று அவ்வறிக்கை மேலும் கூறியது.