சுக்ரி : நஜிப்புக்கு எதிராக பேச, மூன்று அமைச்சர்கள் மட்டுமே தைரியமாக இருந்தனர்

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்எசிசி) தலைமை ஆணையர் முகமட் சுக்ரி அப்துல், நஜிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தோடு, இதற்கு முன்னர் தானும் தனது முன்னாள் தலைவர் அபு காசிம் முகமட்டும் சில அமைச்சர்களை அணுகியதாக தெரிவித்தார்.

2015-ல், RM2.6 பில்லியன் நிதி மற்றும் எஸ்.ஆர்.சி. இண்டர்நேசனல் சென்.பெர். நிறுவனத்திலிருந்து RM42 மில்லியன் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டதாக செய்தி வந்தபோது, எம்எசிசி இந்த நடவடிக்கையை மேற்கொண்டது என்றார் அவர்.

எனினும், அதைப் பற்றி பேச மூன்று அமைச்சர்கள், முன்னாள் துணைப் பிரதமர் முஹைடின் யாசின், கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு முன்னாள் அமைச்சர் முகமட் ஷாஃபி மற்றும் முன்னாள் இரண்டாம் நிதியமைச்சர் அகமது ஹுஸ்னி முகமட் ஹனாட்ஜியா ஆகியோர் மட்டுமே தைரியமாக முன்வந்தனர் என்றார்.

“பல அச்சுறுத்தல்கள் வந்தபோதும், நாங்கள் இருவரும் (முகமட் சுக்ரி மற்றும் அபு காசிம்) முயற்சியைக் கைவிடவில்லை. அந்த வழக்கு உண்மையானது, பொய் அல்ல என நம்பவைக்க, நாங்கள் இருவரும் பல அமைச்சர்களைச் சந்தித்தோம்.

“தயவுசெய்து இந்த நபரை அகற்றுங்கள், இந்த ஊழல்வாதியை நீக்குங்கள், நீங்கள் நாட்டை நேசிக்கிறீர்களானால் இவருக்குப் பதிலாக வேறொருவரை மாற்றுங்கள் என அந்த அமைச்சர்களிடம் நாங்கள் கூறினோம்.

“நஜிப்பை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக அஹ்மட் ஜாஹிட் அல்லது ஹிஷாமுடின் ஹுசேனை நியமியுங்கள், நேர்மையான ஒருவரை பிரதமராக்குங்கள்,” என இன்று புத்ராஜெயாவில் இருக்கும் எம்எசிசி தலைமையகத்தில் நடந்த ஊடக மாநாட்டில் அவர் தெரிவித்தார், அது இன்று சில தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பட்டது.

3 அமைச்சர்கள் மட்டுமே முன்வந்ததால், அபு காசிம் அம்முயற்சியைக் கைவிட்டார் எனவும் சுக்ரி தெரிவித்தார்.

ஆனால், 14-வது பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், முன்னாள் அமைச்சர்கள் பலர் தன்னை அழைத்து, நஜிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது பற்றி வருத்தம் தெரிவித்ததாகவும் அவர் சொன்னார்.

அமைச்சர்கள் மட்டுமின்றி, நஜிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, அவரும் அபு காசிமும் ஆட்சியாளர் மன்றத்தையும் நாடியதாக சுக்ரி மேலும் தெரிவித்தார்.

“நாட்டை நேசிப்பதால் நாங்கள் இந்த முயற்சிகளை மேற்கொண்டோம், ஆட்சியாளர்களை சந்தித்தோம்…. இரண்டு முறை, ஆனால் எங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது,” என்றார் அவர்.

RM2.6 பில்லியன் நிதி வழக்கு மற்றும் எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் நிறுவனம் மீது இரண்டு விசாரணை ஆவணங்களை நிறைவு செய்த ஒருவராக முகமட் சுக்ரி திகழ்கிறார்.

அந்த நேரத்தில், அவர் எம்எசிசி-இன் துணைத் தலைமை ஆணையராக இருந்தார், 2016-ல் கட்டாயப் பணி ஓய்வு பெறும் முன்னர்.

பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட், சமீபத்தில் பதவி விலகிய சுல்கிப்ளி அகமட்டிற்குப் பதிலாக, எம்எசிசி-இன் துணைத் தலைமை ஆணையராக முகமட் சுக்ரியை நியமித்தார்.

– பெர்னாமா