யுத்தப் பாதிப்பு காரணமாக நாட்டிலிருந்து வெளியேறி மீள திரும்பியவர்களுக்கு சகல உதவிகளையும் வழங்க வேண்டும்: இரா.சம்பந்தன்

“யுத்தப் பாதிப்பு காரணமாக நாட்டில் இருந்து வெளியேறி மீளத்திரும்பியவர்களுக்கான சகல வசதிகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக மேற்கொண்டு, அவர்கள் இயல்வு வாழ்விற்கு வரக்கூடியதாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த கால யுத்தத்தின் போது உள்ளூர் மற்றும் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து மீள தமது சொந்த இடங்களுக்கு வருகை தரும் மக்களை மீள அவர்களின் இயல்வு வாழ்விற்கு கொண்டு செல்ல வேண்டியது அரசாங்கத்தினதும் அரச அதிகாரிகளினதும் கடமையாகும். எனவே இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

அத்துடன், அவர்களுக்கு சொந்தமான நிலங்களை அவர்கள் துப்பரவு செய்து குடியேறுவதற்கு வன பரிபாலன திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் என்பன பல்வேறு விததில் தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. எனவே, இவ்விடத்தினை விடுத்து அவர்கள் இடம்பெயரும் போது அப்பகுதியில் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் இருப்பின் அவர்களை உடனடியாக அப்பகுதியில் குடியேற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்கான குடியிருப்பு வசதிகள் மற்றும் அடிப்படை தேவைகளை அரச அதிகாரிகள் பூர்த்தி செய்ய வேண்டும்.” என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: