தியோ பெங் ஹோக் மரணம் மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும், கிட் சியாங் வேண்டுகோள்

 

தியோ பெங் ஹோக் மரணமடைந்த சம்பவம் மற்றும் “அநீதிகள்” என்று குற்றம்சாட்டப்படும் இதர மரணங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் மறுபடியும் நடத்தப்பட வேண்டும் என்று டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கருத்து தெரிவித்தார்.

இவ்வாறு செய்வதன் வழி இந்த ஒன்பது ஆண்டுகால வழக்கிற்கு ஓர் இறுதியான நீதி கிடைக்கும் என்றாரவர்.

நேரம்கெட்ட நேரத்தில் விசாரிக்கக்கூடாதாம்!

பதவியிலிருந்து அகற்றப்பட்ட நஜிப் ரசாக்கின் 1எம்டிபி ஊழல்கள் மீது நடந்து வரும் எம்எசிசி விசாரணைகள் முறையாக இருக்க வேண்டும். நேரம்கெட்ட நேரத்தில் விசாரிக்காமலும் இருக்க வேண்டும் என்று அம்னோவின் இடைக்காலத் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து கிட் சியாங் இவ்வாறு கூறினார்.

முறையான நேரத்தில், நேரம்கெட்ட நேரத்தில் அல்ல, என்ற விதி கண்டிப்பான முறையில் பின்பற்றப்பட்டிருந்தால், தியோ பெங் ஹோக் ஷா அலாமிலுள்ள எம்எசிசி அலுவலகக் கட்டடத்தில் ஜூலை 16, 2009 இல் இறந்திருக்க மாட்டார் என்று கூறிய கிட் சியாங், கிட்டத்தட்ட கடந்த ஒன்பது ஆண்டுகளாக நீதிக்காக காத்திருக்கிறோம் – ஆகவே. தியோ பெங் ஹோக் வழக்கு மற்றும் அது போன்ற மரணத்தில் முடிவுற்ற இதர பல வழக்குகளுகளிலும் நீதி வழங்குவதற்க அவ்வழக்குகள் மறுபடியும் திறக்கப்பட வேண்டும் என்றாரவர்.

செரி கெம்பாங்ஙான் சட்டமன்ற உறுப்பினர் இயன் யோங் ஹியான் வாவின் அரசியல் உதவியாளரான தியோ பெங் ஹோக் 2009 ஆம் ஆண்டில் எம்எசிசியின் முன்னாள் சிலாங்கூர் தலைமையகத்தின் 9 ஆவது மாடியிலிருந்து விழுந்து இறந்து கிடக்கக் காணப்பட்டார். அவர் அங்கு விசாரணைக்காக ஓர் இரவு முழுவதும் வைக்கப்பட்டிருந்தார்.

2014 ஆண்டில், மேல்முறையீட்டு நீதிமன்றம் தியோவின் மரணம் மீது கரோனர் அளித்திருந்த திறந்த தீர்ப்பைத் தள்ளுபடி செய்து, அவர் விழுந்ததால் இறந்தார் என்றும், அது இன்னார் என்று தெரியாதவர்களால், எம்எசிசி அதிகாரிகள் உட்பட, செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தீர்ப்பளித்தது.

இந்த மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் போலீஸுக்கு உத்தரவிட்டது.

ஆனால், சட்டத்துறை அலுவலகம் (ஏஜி அலுவலகம்) அந்த மரணத்தில் குற்றவியல் கூறுகள் ஏதும் இல்லை என்று அறிவித்தது.

கொலை செய்யப்பட்ட மங்கோலியப் பெண் அல்தான்துயாவின் வழக்கு மறுபடியும் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தால் திறக்கப்பட வேண்டும் என்று பல கோரிக்கைகள் எழுந்துள்ள வேளையில், கிட் சியாங் இகோரிக்கையை விடுத்துள்ளார்.