ஸ்டெர்லைட் போராட்டம்: தூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை

தூத்துக்குடியில் இரண்டாவது நாளாக தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது காவல்துறை. இதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும், ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அரசாங்க தரப்பில் இதுபற்றி அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

தூத்துக்குடியில் நேற்றைய தினம் (மே 22) நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்து அவர்களின் உறவினர்களும், ஸ்டெர்லைட் போராட்ட ஆதரவாளர்களும் மருத்துவமனை வளாகத்தில் காவல்துறைக்கு எதிராக போராடினர். காவல்துறை தடியடி நடத்தியது. அவ்விடங்களில் கல்வீச்சு சம்பவமும் நடைபெற்றது.

தூத்துக்குடியில் அண்ணா நகர் பகுதியில் போராட்டக்காரர்கள் இன்று கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். போலீசார் அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். 22 வயது காளியப்பன் என்ற இளைஞர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. காளியப்பன் நிலை குறித்து அரசாங்கம் இதுவரை எந்தவித உறுதிப்பூர்வமான தகவலையும் தரவில்லை.

தூத்துக்குடியில் நகர்ப்பகுதிகளில் கடைகள் மூடப்பட்டு, பொதுப்போக்குவரத்து பல பகுதிகளிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

கலவரம் நடந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பாளையங்கோட்டை சாலை ஆகிய இடங்களில் எரிக்கப்பட்ட வாகனங்கள் நடந்த போராட்டத்திற்கு சாட்சியாக அங்கேயே கிடக்கின்றன.

தூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு

நேற்றைய துப்பாக்கிச்சூட்டில் ஒன்பது பேர் உயிரிழந்ததாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால், அரசுத் தரப்பில் இன்னமும் உறுதிப்படுத்தவில்லை. -BBC_Tamil

TAGS: