தியான் சூவா : ஹராப்பான் தலைவர்கள் ஒற்றுமையை நிரூபிக்க வேண்டும்

பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள், சகத் தோழர்கள் மீது பகிரங்கமாக குறைகூறுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா கூறினார்.

பிகேஆர் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி மற்றும் உதவித் தலைவர் ரஃபிஷி ரம்லி இருவருக்கிடையேயான கருத்து வேறுபாடுகள் குறித்து பேசுகையில், புதிய அரசாங்கத்தில், பக்காத்தான் ஹராப்பானின் வலுவான ஆட்சியை மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.

“அனைத்து பிகேஆர் தலைவர்களும் முழு ஆதரவைக் கொடுக்க வேண்டும், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மீதான நம்பிக்கைக்குப் பங்கம் விளைவிக்கும் எதையும் செய்யக்கூடாது.

“எனவே, சிறு கருத்து வேறுபாடாக இருந்தாலும், அதனை பொதுவில் வெளிப்படையாக தெரிவித்து, மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி விடாதீர்கள்,” என நேற்று, பெர்னாமா வானொலியின் சிறப்பு நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்தார்.

அஸ்மின் அலியும் ரஃபிசியும் ஒற்றுமையாக செயல்பட்டு, சீர்திருத்த திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென பிகேஆர் பொதுத் தலைவர் அன்வார் இப்ராஹிம் விரும்புகிறார் அன்றும் அவர் தெரிவித்தார்.

“மக்கள் , ஹராப்பான் கூட்டணி வலுவாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். இது என்னுடைய தனிபட்ட விருப்பம் அல்ல, அன்வாரின் விருப்பத்தை நான் வரவேற்கிறேன். மேலும், இப்பிரச்சனை அந்த இரு தலைவர்கள் மட்டும் சார்ந்ததல்ல.

“எனவே, ரஃபிசிக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதனை அமைதியாக விவாதிப்பது நல்லது,” என்று அவர் கூறினார்.

-பெர்னாமா