இறால் பண்ணைகளுக்கு எதிர்ப்பு: 12 கிராம மக்கள் ராமேஸ்வரத்தில் சங்கு ஊதி காத்திருப்பு போராட்டம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவில் நிலத்தடி நீரை பாழாக்கியும், சுற்றுசூழலை மாசுபடுத்தியும்வரும் வரும் இறால் பண்ணைகளை அகற்ற கோரி 12 கிராம மக்கள் சங்கு ஊதி பேருந்து நிலையம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்கத்தினரும் இணைந்து கரம் கோர்த்து போராடி வருகின்றனர்.

ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் சிறிது காலமாகவே வரும் இறால் பண்ணைகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. குறிப்பாக வடகாடு, சம்பை, மாங்காடு, அரியான்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் இந்த பண்ணைகள் இயங்கி வருகின்றன. ஆனால் பண்ணைகளிலிருருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரானது, கடலிலும், மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கலக்கிறது. இதனால் நீர்நிலைகள் மாசடைந்து வருவதுடன், 12 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.

இதனால் தீவுப்பகுதிகளில் இயங்கி வரும் இறால் பண்ணைகளை அகற்ற வலியுறுத்தி மீனவ கிராம மக்கள் பல்வேறு வடிவங்களில் மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர். அதேபோல தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்கத்தினரும் இறால் பண்ணைகளை அகற்ற வேண்டுகோள் விடுத்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். என்றாலும் அவைகுறித்து எந்தவித நடவடிக்கையும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இதே கோரிக்கையினை வலியுறுத்தி தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்கத்தினர் மற்றும் 12 கிராம மக்கள் இன்று மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்ற கிராம மக்கள் சங்குஊதி காத்திருக்கும் போராட்டத்திலும் நடத்தி வருகின்றனர்.

tamil.oneindia.com

TAGS: