கூட்டணி’ உணர்வு இப்போதில்லை, எனவே பிஎன்னைக் கலைப்பீர்: அம்னோ மூத்தோர் கோரிக்கை

‘அம்னோ   மூத்தோர்   மன்றம்   பிஎன்  கூட்டணி   இப்போது   தேவையற்ற   ஒன்றாகிவிட்டது    என்பதால்   அதைக்  கலைத்து  விடுவது   நல்லது     என்று   கூறியுள்ளது.

அம்னோ,  மசீச,  மஇகா    ஆகியவற்றுக்கிடையில்   முன்பிருந்த   “கூட்டணி”   உணர்வு    இப்போது   இல்லை    என   அம்மன்றத்   தலைமைச்     செயலாளர்   முஸ்தபா   யாக்கூப்    கூறினார்.

“பிஎன்னின்    முக்கிய  விசையாக     செயல்பட்டு   வந்துள்ள   அம்னோ   கூட்டணியின்   உச்சமன்றத்தைக்  கூட்டி    இது   குறித்து    விவாதிக்க     வேண்டும்”,  என  என்எஸ்டி   ஆன்லைனில்     அவர்    கூறினார்.

பிஎன்  உறுப்புக்கட்சிகளை   இதுகாறும்   தாங்கிப்   பிடித்துக்கொண்டிருந்தது   அம்னோதான்     என்று   முஸ்தபா   கூறினார்.

“ அம்னோ   வலுவாக   இருந்ததால்   பிஎன்   வலுவாக   இருந்தது.  14வது   பொதுத்   தேர்தலில்  பிஎன்னால்   அரசாங்கம்   அமைக்க   முடியாமல்   போனதால்   அம்னோ   பலவீனமடைந்து  விட்டதாக    அவர்கள்   கருதுகிறார்கள்.

“அம்னோ   நாடாளுமன்றத்தில்   54   இடங்களை   வைத்திருப்பதை    அவர்கள்   மறந்து   விட்டார்கள்.

“இங்கு  பலவீனமடைந்திருப்பது  யார்?  மீண்டும்    எழுந்து   நிற்க    முடியாத   நிலையில்   உள்ள   மசீச,   கெராக்கான்,  மஇகா   ஆகியவைதாம். மலாய்க்கார்கள்   பெரும்பான்மையாக   உள்ள    இடங்களில்தான்     அவர்களால்   வெற்றி  பெற   முடியும்.  மசீச-விலும்  கெராக்கானிலும்    பிஎன்னிலிருந்து   அம்னோவை   விலக்கி  வைக்க   வேண்டும்     என்ற   குரல்கள்     எழுவதற்குக்   காரணம்    அவரகள்  வரலாற்றை,  இதுகாறும்   அம்னோவுடன்    ஒட்டிக்கொண்டிருந்ததை  மறந்து  விட்டார்கள்  என்றுதான்   அர்த்தம்”,   என்றார்.

அம்னோவால்  தனித்துப்   போராடி     இனத்தையும்    சமயத்தையும்  நாட்டையும்    காக்க   முடியும்   என்ற    நம்பிக்கை   மூத்த    உறுப்பினர்களுக்கு   உண்டு   என்று   முஸ்தபா     குறிப்பிட்டார்.