பெட்ரியோட்: டிபிகேஎல் ரமலான் சந்தை முறைகேடு ஹரப்பானுக்கு முதல் கரும்புள்ளி

ஆயுதப்  படை      முன்னாள்   பணியாளர்  சங்கம்,   பெட்ரியோட்,   கோலாலும்பூர்  மாநகராண்மைக்  கழக(டிபிகேஎல்)த்தின்  ரமலான்   சந்தை    விவகாரம்   பக்கத்தான்  ஹரப்பானுக்கு   முதலும்   கடைசியுமான  “கரும்புள்ளி”ச்  சம்பவமாக   இருக்கட்டும்   என்கிறது.

“ஒரு  பெர்சத்து   தொகுதித்    தலைவர்,   புக்கிட்   பிந்தாங்    எம்பி,   டிபிகேஎல்    அதிகாரிகள்     சம்பந்தப்பட்டுள்ளதாகக்  கூறப்படும்    டிபிகேஎல்   ரமலான்  சந்தை   விவகாரம்    ஹரப்பான்  அரசாங்கத்துக்கு   முதலாவது   கரும்புள்ளியாக   அமைந்து  விட்டது.

“இந்த  முதல்  கரும்புள்ளிச்   சம்பவமே   கடைசியாகவும்   இருக்கட்டும்.  நாட்டை  மறுநிர்மாணிப்புக்கு   செய்ய  வேண்டியது   நிறைய    உள்ளது”,  என  பெட்ரியோட்    தலைவர்   முகம்மட்  அர்ஷாட்   ராஜி  இன்று   ஓர்    அறிக்கையில்   கூறினார்.

ஜாலான்  மஸ்ஜிட்    இந்தியாவில்   அமைந்த   ரமலான்  சந்தைதான்   சர்ச்சைக்குக்   காரணம்.  பெர்சத்து  இளைஞர்   தலைவர்   ஒருவர்   தன்   அரசியல்   செல்வாக்கை   வைத்து   டிபிகேஎல்-இடம்    80  கடைகள்  அமைப்பதற்கு   அனுமதி   பெற்றாராம். 80  கடைகளையும்   ரிம6,238   கொடுத்து   வாங்கிய  அவர்  பிறகு  ஒவ்வொரு  கடையையும்   வியாபாரிகளிடம்  ரிம5,000 -க்கு   விற்றாராம்.

புக்கிட்   பிந்தாங்   பெர்சத்து   இளைஞர்    தலைவர்     முகம்மட்  நூர்ஹிஷ்யாம்   அப்துல்   கரிம்  வியாபாரிகளிடம்   பணம்    வாங்கியதாகக்   கூறப்படுவதை   மறுத்தார்.  தமக்கு  எதிராகக்  கூறப்படும்   குற்றச்சாட்டுகள்    தொடர்பில்   போலீஸ்   புகார்   செய்வது   குறித்து   ஆலோசனை    செய்து  வருவதாகவும்    அவர்    தெரிவித்தார்.

ஆனால்,   முகம்மட்     அர்ஷாட்    ஒரு  முறைகேடான   சம்பவத்துக்கு    என்னதான் விளக்கமளிதாலும்   அது   முறைகேடுதான்  என்றும்    அதை  முழுமையாக  விசாரிப்பதே  முறையாகும்   என்றும்   கூறினார்.

“ஹரப்பான்   எம்பிகளும்   சட்டமன்ற     உறுப்பினர்களும்   லைசென்ஸ்,  பெர்மிட்,  குத்தகை  போன்றவற்றுக்குப்    பரிந்துரைக்கும்போது    கவனத்துடன்   செயல்பட    வேண்டும்   என்று  பெட்ரியோட்    நினைவுறுத்த    விரும்புகிறது”,  என்றார்.