ஸகிர் நாய்க்கை வெளியேற்ற வேண்டும் என்ற கெடுபிடிக்கு அரசாங்கம் பணியக்கூடாது, மகாதிர் கூறுகிறார்

 

சட்டம் உட்பட பலவற்றை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளதால் இஸ்லாமிய போதகர் ஸகிர் நாய்க்கை வெளியேற்ற வேண்டும் என்று கொடுக்கப்படும் அழுத்தத்திற்கு அரசாங்கம் பணியக்கூடாது என்று பிரதமர் மகாதிர் கூறுகிறார்.

நாம் மற்றவர்களின் விருப்பத்தை எப்போதும் பின்பற்ற வேண்டும் என்ற கடப்பாடு நமக்குக் கிடையாது. எந்த ஒரு அழுத்தத்திற்கும் எதிர்வினையாற்றும் போது நாம் அதற்கான காரணத்தை அடையாளம் காண வேண்டும், அவர் (ஸகிர்) சட்டத்தைப் பின்பற்றினாரா இல்லையா என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றார் மகாதிர்.

இல்லை என்றால், யாராவது ஒருவர் பாதிக்கப்படுவார் என்று மகாதிர் இன்று புத்ரா ஜெயாவில் கூறினார்.

ஸகிர் நாய்க்கை அவரது தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று பினாங்கு இரண்டாவது துணை முதலமைச்சர் பி. இராமசாமி கூறியிருந்த ஆலோசனைக்கு கருத்து தெரிவிக்கும்படி கேட்கப்பட்ட போது மகாதிர் இவ்வாறு கூறினார்.

பல செய்தித் தளங்கள் ஸகிர் நாய்க் திருப்பி அனுப்பப்படுவார் என்று செய்தி வெளியிட்டிருந்தன.

2016 இல் ஸகிர் இந்தியாவை விட்டு வெளியேறினார். அவரது கடப்பிதழை இந்திய அரசு இரத்து செய்துள்ளது.