அடுத்த நாடாளுமன்ற மக்களைவைத் தலைவர் முன்னாள் நீதிபதியா?

 

முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகமட் அரிப் யூசுப் நாடாளுமன்ற மக்களவையின் தலைவராக நியமிக்கப்படுவதில் பக்கத்தான் ஹரப்பான் அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இப்பதவிக்கு முன்னர் முன்மொழியப்பட்ட வேட்பாளர்கள், குறிப்பாக பிகேஆர் சுங்கை பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜொஹாரி அப்துல், சர்ச்சைகளை உண்டுபண்ணியுள்ளனர்.

இப்போது அப்பதவிக்கு தேர்வு செய்யப்படக் கூடியவராக அரிப் இருப்பதாக ஓர் அரசாங்க வட்டாரம் மலேசியாகினியிடம் கூறியுள்ளது.

மக்களவை தலைவர் பதவிக்கு அரிப் முன்னணி வேட்பாளராக இருக்கிறார். இது விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். அவர் அனுபவமிக்க மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி. அவர் அப்பழுக்கு அற்றவர் என்று அந்த வட்டாரம் மலேசியாகினியிடம் கூறியது.

ஜி25 குழுவும் அவர் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது.

அமனாவும் அவரை கட்சியின் ஒழுங்குமுறை குழுவின் தலைவராக ஏப்ரல் 18 இல் அறிவித்திருந்தது.

2004 ஆம் ஆண்டில், அவர் பாஸ் கட்சியின் கோத்தா டாமன்சாரா மாநில சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.

நேற்றுவரையில், கெடா மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜொஹாரி மக்களவைத் தலைவர் வேட்பாளர் என்று பிகேஆர் கூறிவந்தது.

ஜொஹாரி கெடா, குரூன் சட்டமன்ற உறுப்பினராக இருப்பது சட்டப் பிரச்ச்னையை உருவாகியுள்ளது.

கிட் சியாங் மக்களைவைத் தலைவரா?

முன்னதாக, இஸ்கந்தர் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் இப்பதவிக்கு வேட்பாளராக நியமிக்கப்படும் சாத்தியம் இருந்ததாக கூறப்பட்டது.

இது குறித்து கேட்கப்பட்ட போது, கிட் சியாங் கருத்துரைக்க மறுத்து விட்டார்.

டோமி தோமஸ் சட்டத்துறை தலைவராக நியமிக்கப்பட்டதில் எழுந்த இனப் பிரச்சனை மீண்டும் கிளப்பப்படுவதை சில தலைவர்கள் விரும்பவில்லை என்று ஹரப்பான் வாட்டாரங்கள் மலேசியாகினியிடம் கூறின.