நில ஊழலில் சிஎம் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பினாங்கு பிஎன் ‘சந்தேகிக்கிறது’

பினாங்கு தாமான் மாங்கிஸில் பொது வீடமைப்புக்காக ஒதுக்கப்பட்டதாக தான் கூறிக் கொள்ளும்  ஒரு துண்டு நிலம் முதலமைச்சர் லிம் குவான் எங்-குடன் “தொடர்புகளை”கொண்ட தனிநபர் ஒருவருக்கு விற்கப்பட்டதா என பினாங்கு பிஎன் அறிய விரும்புகிறது.

பினாங்கு மாநில இளைஞர் தகவல் பிரிவுத் தலைவர் ஹிங் கூன் லெங்  இன்று நிருபர்கள் சந்திப்பு ஒன்றில் அவ்வாறு கேட்டுக் கொண்டார்.

அவர், தமது கூற்றுக்கு ஆதரவாக நிபுணத்துவ மருத்துவ மய்யம், பல் மருத்துவக் குழாம் ஆகிய இரண்டு நிறுவனங்களின் பங்குதாரர் பட்டியலை வெளியிட்டார்.

தமக்குக் கிடைத்துள்ள தகவலின்படி இப்போது கோலாலம்பூரில் வாழ்ந்து வருகின்ற அண்மையில் சபா மாநிலத்தில் சமதான நீதிபதியாக்கப்பட்ட ஒரு ‘டத்தோ’ அந்த இரண்டு நிறுவனங்களிலும் சம்பந்தப்பட்டுள்ளதாக ஹிங் கூறிக் கொண்டார்.

அந்த நபரின் பினாங்கிலுள்ள வர்த்தக இணைப்புக்கள் முதலமைச்சருடன் ‘தொடர்புகள்’ வைத்துள்ளனவா என்றும் தனியார் மருத்துவ மய்யம் ஒன்றை அமைப்பதற்கு அந்த நிலம் விற்கப்பட வேண்டும் என லிம் யோசனை கூறினாரா என்றும் ஹிங் கேள்வி எழுப்பினார்.

“லிம் டெண்டர் வாரியத்தில் உறுப்பினராக இருப்பதால் அவருக்கு அந்த நிலத்தின் மீது தனிப்பட்ட அக்கறை இருக்க வேண்டும் என நாங்கள் சந்தேகம் கொள்கிறோம். ஆகவே பொது மக்களுக்கு அவர் அந்த விவகாரத்தைத் தெளிவுபடுத்துவார் என நாங்கள் நம்புகிறோம்,” என அவர் இன்று பினாங்கில் கூறினார்.

“அந்த டெண்டருக்கான முயற்சியில் கோலாலம்பூர் அனைத்துலகப் பல் மருத்துவ மய்யத்தின் உரிமையாளர் வெற்றி பெறுவதற்கு முன்னரே அவரை முதலமைச்சருக்குத் தெரியுமா என்பதையும் நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம். அதற்கு ஆம் எனப் பதில் அளித்தால் எப்போது முதல் தெரியும் என்பதை தெரிந்து கொள்ளவும் நாங்கள் விரும்புகிறோம்,” என மாநில கெரக்கான் இளைஞர் துணைத் தலைவருமான ஹிங் வினவினார்.