தீபாவளி வாழ்த்தில் பிரதமரின் சாயம் வெளுத்தது

வணக்கம். கோமாளியின் தீபாவளி வாழ்த்துக்கள்.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பும் பின்பும் நாம் நாட்டுக்காக உழைத்துள்ளோம். இரத்தத்தை வியர்வையாக்கி, உடல் பொருள் ஆவியென அர்ப்பணம் செய்துள்ளோம். நள்ளிரவில் சுதந்திரம், இன்னமும் விடியவில்லை என்பதுதான் ஏக்கமாக உள்ளது. இந்த நாடு நமக்கும் சொந்தம் என்பதிலும் நமக்கு சம உரிமை உண்டு என்பதிலும் அரசியல் தீர்வு அற்ற வாழ்வுதான் நமக்கு.

இன்றும் நமக்கு ஏமாற்றம்தான். உங்களிள் பலருக்கு கிடைத்த பிரதமரின்  அதே தீபாவளி வாழ்த்து எனது மகளுக்கும் மனைவிக்கும் கிடைத்தது. அவர்களுக்கு பலத்த ஏமாற்றம்.

அப்படி என்ன ஏமாற்றம்? அதில் கண்ட வாசகங்கள் (நீல வண்ணம்) இதோ!

“தலைவர்கள் தேசிய ஒற்றுமைக்கு முன்னுரிமை அளித்து பாடுபட்டுள்ளனர்”

உண்மை: தலைவர்கள் மக்களை இனவாரியாக கூறு போட்டு, இன அரசியல் அமைத்து, அதிகாரத்தை கைப்பற்றி நாட்டின் வளத்தை சுரண்டப் பாடுபட்டுள்ளனர்.

“இனம், சமயம், அல்லது பண்பாட்டு வேறுபாடுகள் அற்ற ஒரே நாடு – 1 மலேசியா நோக்கம் – இதனையே முக்கிய அணுகுமுறையாக தேசிய முன்னணி கடைப்பிடித்து வந்துள்ளது”

உண்மை: இனம், சமயம், அல்லது பண்பாட்டு வேறுபாடுகள் கொண்ட நாடு என்பதுதானே நாம் கேட்பது. அதற்குத்தானே போராடுகிறோம். வேறுபாடுகள் அற்ற ஒரே நாடு என்றால் என்ன பொருள்? வேற்றுமையில் ஒற்றுமை வேண்டும். வேற்றுமையற்ற ஒற்றுமை என்பது  கல்லும்  புல்லும்  தோன்றிய  காலத்திலிருந்து இன்றுவரையில் இருந்ததே இல்லை. ஆகவே வேற்றுமையற்ற ஒற்றுமை  என்பதை ஏற்க இயலாது.

“…பல்லின மக்களிடையே ஒருவர் மற்றொருவரை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையே தேசிய ஒற்றுமைக்கு அடித்தளமாகும்”

உண்மை: மனப்பான்மை என்பது ஓர் உணர்வு. அதை உண்டாக்க அரசாங்கம் கொள்கை, சட்டம், திட்டம், அமலாக்க அமைப்புமுறை, மீள்பார்வை போன்ற வழிமுறைகளைக்  கொண்டிருக்க வேண்டும். ஆனால் நாம் காண்பது வெறும் விளம்பரமும், வான வேடிக்கையும், விருந்தும், பரிசு கூடைகள் – இவைதான் முதலானவைகளாக இருக்கின்றன. இந்த இத்யாதிகளுக்கு நாம் வாலாட்ட வேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பு அவர்கள் இன்னமும் மாறவில்லை என்பதைக்காட்டுகிறது. வாலாட்டும் சொறி நாய்களாக இருக்கும்வரைதான் எழும்புத்துண்டுகள்!

“2013 வரவு செலவு திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பல்வேறு சலுகைகள் அனைவரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கம் கொண்டவையாகும்.”

உண்மை: குறைந்த மட்டமான சம்பளம் அல்லது வருமானம், அதனால் உண்டாகும் கடன் தொல்லை, வாடகை வீடு, கார் கடன், கல்விக் கடன், பொருட்களின் விலையேற்றம், விசம்போல் ஏற்றம் கண்டுள்ள வீடுகளின் விலை, கடன் வாங்கி படித்தும் அதற்கேற்ற வேலையின்மை – இப்படி சுமார் 70 விழுக்காடு குடும்பங்கள் மன உலைச்சலுடன் வாழ்கிறார்கள். 2013 வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பல்வேறு சலுகைகள் வாக்குகளுக்கான ஓர் அட்வான்ஸ்தான். அவற்றால் அவர்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை வழங்க இயலாது.

பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி கோமாளிக்கு ஏமாற்றத்தை அளிக்கவில்லை. அவர்கள் அவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதை மீண்டும் பகிரங்கமாக, தெளிவாக, விசேசமாக தனிப்பட்ட வகையில் தபால்வழி தங்களின் சுயரூபத்தை காட்டியுள்ளதற்கு கோமாளியின்  பாரட்டுகள்.

“தீமை எனும் இருளைப் போக்க வேண்டும்” என்பதில் உடன்பட்டு தீபத்திருநாளை கொண்டாடுவோம்.