சிலாங்கூர் பத்துமலைப் பணிக்குழு உறுப்பினர்களை அறிவித்தது

condoபத்துமலைக்கு அருகில் ‘கொண்டோ’ திட்டம் ஒன்றுக்கு அரசாங்க அனுமதி வழங்கப்பட்டது மீது விசாரணை நடத்த ஐவர் கொண்ட குழுவை சிலாங்கூர் அரசாங்கம் இன்று பெயர் குறிப்பிட்டது.

கிள்ளான் மாவட்ட ஒராங் புசார் அப்துல் கனி பாத்தே அஹிர், நரம்பு அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் எம் நாச்சியப்பன், முன்னாள் நீதித் துறை ஆணையர் ரனித்தா ஹுசேன், கட்டுமானச் சட்ட நிபுணர் ஹார்பான்ஸ் சிங், மண்ணியல் நிபுணர்  தான் பூன் கோங் ஆகியோர் அந்த ஐவரும் ஆவர்.

மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் இன்று விடுத்த ஒர் அறிக்கையில் அவர்களுடைய பெயர்களை அறிவித்தார்.

அந்தக் குழுவுக்குக் கொடுக்கப்பட்டுள்ள கால வரம்பு, அதன் கடமைகள் பற்றி அந்த அறிக்கையில் எதுவும் சிறப்பாகக் குறிப்பிடப்படவில்லை.

“அவர்கள் அந்த விவகாரத்தை சுயேச்சையாகவும் தொழில் ரீதியாகவும் விசாரிப்பர். அந்த விஷயத்தை நேர்மையுடனும் வெளிப்படையான முறையிலும் மாநில அரசாங்கம் கையாளுவதற்கு அந்தக் குழு அறிவுரை வழங்கும்,” என காலித் சொன்னார்.

மாநில அரசாங்கம் ஏற்கனவே அந்தக் குழுவை நவம்பர் இரண்டாவது வாரத்தில் அறிவித்திருக்க வேண்டும். ஆனால் அது அணுகிய சில நிபுணர்கள் நியமனத்தை நிராகரித்து விட்டனர்.

பத்துமலைக் கோயில் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் அந்த கொண்டோ திட்டம் எப்படி அங்கீகரிக்கப்பட்டது என்பதைக் கண்டறிய சிலாங்கூர் வாக்குறுதி அளித்துள்ளது.