‘பிஹாய் தேசியப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு ‘மட்டம்’ போடுவது குவா மூசாங் கல்வித் துறைக்குத் தெரியும்

bihaiகிளந்தானில் ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்துள்ள பிஹாய் தேசியப் பள்ளி ஆசிரியர்கள் வாரத்துக்கு மூன்று நாட்களுக்கு மட்டுமே மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பது பற்றி குவா மூசாங் கல்வித் துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தத் துறையின் அதிகாரிகளுடன் நவம்பர் முதல் தேதி நடைபெற்ற கலந்துரையாடலின் போது அது பற்றித் தெரிவிக்கப்பட்டதாக பிஹாய் தேசியப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் அரோம் அசிர் கூறினார்.

அந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஆசிரியர்களில் குவா மூசாங் மாவட்ட கல்வி அதிகாரி முகமட் ஸாஹாரி ஒஸ்மானும் ஒருவர் ஆவார்.

“அவர்களுக்கு அது ஏற்கனவே தெரியும். நாங்கள் கல்வி அமைச்சின் பேராளர்கள் பங்கு கொண்ட அந்தக் கலந்துரையாடலில் அது பற்றி கூறினோம்,” என அரோம் நேற்று மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

அந்த விஷயத்தை அமைச்சு விசாரிப்பதற்கு பெற்றோர்கள் முதலில் புகார் செய்ய வேண்டும் என கல்வித் துணை அமைச்சர் முகமட் புவாட் ஸார்க்காஷி வழங்கிய ஆலோசனை பற்றி அவர் பதில் அளித்தார்.

நண்பகல் உணவுக்குப் பின்னர் துவா சொல்லாததற்காக நான்கு ஆறாம் ஆண்டு மாணவர்கள் (அனைவரும் முஸ்லிம் அல்லாதவர்கள்) கன்னத்தில் அறையப்பட்டது குறித்து ஒராங் அஸ்லி பெற்றோர்கள் தகவல் வெளியிட்ட பின்னர் குவா மூசாங்கிற்கு அருகில் உள்ள கோலா பெட்டிஸ் வெள்ளி விழா மண்டபத்தில் அந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

பள்ளிக்கூடத்துக்கு அருகில் கோலா பெட்டிஸிலிருந்து மலேசியாகினி அரோம் -உடன் தொடர்பு கொண்டது.  புவாட் ஆலோசனை பற்றி பெற்றோர்களுடன் விவாதிக்கப் போவதாகவும் அவர் சொன்னார்.

அந்தக் கலந்துரையாடலில் மனித உரிமை ஆணையர் முகமட் ஷானி அப்துல்லாவும் கலந்து கொண்டிருந்தார்.

“மாணவர்கள் கன்னத்தில் அறையப்பட்டது மீது கல்வி அமைச்சு பெற்றோர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட போது அந்தப் பிரச்னை தெரிவிக்கப்பட்டது. அது இரண்டு மாதங்களுக்கு முன்பு,” என ஷானி மலேசியாகினிக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்ப்பினார்.

தங்கள் பிள்ளைகளுக்கு வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே போதிக்கப்படுகின்றது என பெற்றோர்கள் அமைச்சிடம் புகார் செய்ய வேண்டும் என புவாட் செவ்வாய்க் கிழமை கேட்டுக் கொண்டார். அதற்கு பின்னர் அதனை விசாரிக்குமாறு தாம் கிளந்தான் கல்வித் துறைக்கு ஆணையிடலாம் என அவர் சொன்னார்.

அரசாங்கப் பள்ளிக்கூடங்கள்  வாரத்துக்கு ஐந்து நாட்கள் வகுப்புக்களை கட்டாயம் நடத்த வேண்டும்.  கிளந்தானில் உள்ள தங்கள் சொந்த ஊர்களிலிருந்து வருவதற்கும் போவதற்கும் ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் தேவைப்படுவதாக பிஹாய் தேசியப் பள்ளியில் பயிலும் ஒராங் அஸ்லி பிள்ளைகளுடைய பெற்றோர்களுக்கு கூறப்பட்டது.