சிலாங்கூர் மந்திரி புசாரை பெயர் குறிப்பிடுவதை பக்காத்தான் தாமதிக்கிறது

khalidசிலாங்கூர் மாநில அரசாங்கத்தை அதன் நடப்பு பராமரிப்பு அரசாங்க மந்திரி புசார் காலித் இப்ராஹிம் வழி  நடத்துவாரா இல்லையா என்பது மீது இன்னும் முடிவு எடுக்கப்படாததால் அவருடைய நிலைமை இன்னும்  தெளிவாகவில்லை.

அடுத்த தவணைக் காலத்துக்கு யார் மந்திரி புசாராக இருக்க வேண்டும் என்பது மீது விரைவில் கூட்டம்  நடத்தப்படும் என்றும் அதன் முடிவு கூட்டணியின் தலைவர்கள் மன்றத்துக்குத் தெரிவிக்கப்படும் என்றும்  சிலாங்கூர் பிகேஆர் தலைவர் அஸ்மின் அலி மற்ற மாநில பக்காத்தான் ராக்யாட் தலைவர்களுடன் நடத்திய  கூட்டு நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.

“நாங்கள் விவாதிப்போம். பக்காத்தான் தலைவர்கள் எடுக்கும் முடிவை நாங்கள் பின்பற்றுவோம். எதிர்காலத்தில்  நாங்கள் வலுவாக இருக்க நாங்கள் பக்காத்தான் இணக்க உணர்வையும் கலந்தாய்வையும் கடைப்பிடிப்போம்,”  என நிருபர்கள் கேள்விக்குப் பதில் அளித்த போது அஸ்மின் சொன்னார்.

இதனிடையே சிலாங்கூரில் பாஸ் கட்சி பிகேஆர் கட்சியைக் காட்டிலும் வலுவாக இருந்த போதிலும் தமது கட்சிக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என ஷா அலாம் எம்பி காலித் சமாட் கூறியுள்ளார்.

சிலாங்கூரில் பாஸ் 15 சட்டமன்ற இடங்களையும் டிஏபி 15 இடங்களையும் பிகேஆர் 14 இடங்களையும் வென்றுள்ளன.

“பக்காத்தான் ராக்யாட்டில் நாங்கள் அனைவரும் ஒரே பலத்தைக் கொண்டவர்கள்,” என்றார் அவர்.