லிம் குவான் எங்: வேற்று நாடுகளுக்குக் குடியேறுமாறு ஸாஹிட் சொல்வது அபத்தமானது

lim1புதிய உள்துறை அமைச்சர் பொதுத் தேர்தல் குறித்து மகிழ்ச்சி அடையாதவர்கள் இன்னொரு நாட்டுக்குக் குடியேறலாம் என எல்லை மீறிப் பேசுவதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் சாடியிருக்கிறார்.

“இது தான் உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி பயன்படுத்தும் தரம் என்றால் பினாங்கில் உள்ள பிஎன் ஆதரவாளர்களையும் நாங்கள் மாநிலத்திலிருந்து வெளியேறுமாறு சொல்லலாமா ?” என லிம் நேற்றிரவு கொம்தாரில் நிகழந்த கருத்தரங்கு ஒன்றில் வினவினார்.

“அவரது அறிக்கை அர்த்தமே இல்லாதது.”

அண்மைய தேர்தலில் டிஏபி தலைமைச் செயலாளர் தலைமையில்  பக்காத்தான் கூட்டணி பினாங்கு சட்டமன்றத்தில் உள்ள 40 இடங்களில் 30 இடங்களை அதிகப் பெரும்பான்மையுடன் வென்று மாநில அரசாங்கத்தை தக்க வைத்துக் கொண்டது.

limபக்காத்தான் ராக்யாட்டை ஆதரித்தவர்களை ‘பழி வாங்கும், பொறாமை கொள்ளும்’ நோக்கத்தைக் கொண்ட பிஎன் -னிலிருந்து தமது நிர்வாகம் மாறுபட்டது என லிம் கூறினார்.

திரங்கானுவில் அண்மைய பொதுத் தேர்தலில் பக்காத்தான் வெற்றி பெற்ற நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த வசதிகளை மந்திரி புசார் அகமட் சைட் மீட்டுக் கொண்டதாகச் சொல்லப்படுவதையும் லிம் சுட்டிக் காட்டினார்.

“பினாங்கு பக்காத்தான் அரசாங்கம் அனைவரையும் சமமாக நடத்தும். இன, சமய, அரசியல் பிணைப்பு வேறுபாடின்றி அனைவரையும் அது கவனித்துக் கொள்ளும்.”

“இது ஜனநாயகம். நாங்கள் உங்கள் தேர்வை மதிக்கிறோம். எங்களை ஆதரிக்காததற்காக உங்களைப் பழி வாங்கும் பொருட்டு கொடுமையாக நடத்த மாட்டோம்,” என்றார் அவர்.

lim2“நாட்டின் தேர்தல் முறையில் மன நிறைவு அடையாத எதிர்க்கட்சியினர் ‘வேறு எங்காவது குடியேறலாம்’ என உத்துசான் மலேசியாவில் எழுதியுள்ள தலையங்கக் கருத்தில் புதிய உள்துறை அமைச்சர் என்ற முறையில் தெரிவித்திருந்தார்.

அந்த முறையின் கீழ் மே 5 தேர்தலில் 133 நாடாளுமன்ற இடங்களை வென்ற பிஎன் சாதாரணப் பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைத்தது. ஆனால் மொத்தம் செலுத்தப்பட்ட வாக்குகளில் 51.78 விழுக்காட்டைப் பெற்ற பக்காத்தானுக்கு 89 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

பக்காத்தான் நடத்திவரும் ‘கறுப்பு 505’ பேரணிகள் சட்டவிரோதமானவை என்றும் ஸாஹிட் அதில் வருணித்திருந்தார்.

23வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் தோல்வி கண்ட பின்னர் கோலாலம்பூர், பினாங்கு, பேராக், ஜோகூர், பாகாங் ஆகியவற்றில் நடத்தப்பட்டுள்ள அந்தப் பேரணிகளில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.

தாங்கள் வெற்றி பெற்ற பினாங்கு, சிலாங்கூர், கிளந்தான் ஆகியவற்றின் முடிவுகளை ஆட்சேபிக்காத பக்காத்தான் புத்ராஜெயாவைக் கைப்பற்றத் தாங்கள் தவறியதை மறைக்க ‘சட்டவிரோத’ பேரணிகளை நடத்துவதாக ஸாஹிட் கூறினார்.

நியாயமற்ற மலேசிய தேர்தல் நடைமுறை -மோசடி, தில்லுமுல்லுகள் வழி- பிஎன் -னுக்கு நன்மை அளித்துள்ளது என்பதை அலட்சியம் செய்ய முடியாது என்றும் லிம் சொன்னார்.

lim3தனது குழு உறுப்பினர்கள் கண்டு பிடித்துள்ள ‘மோசடி’ சம்பவங்களைக் கொண்டு நீதியைப் பெறுவதற்கு பக்காத்தான் முயலும் என்றும் அவர் தெரிவித்தார்.

“இவ்வாண்டு மேற்கொள்ளப் போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு நடவடிக்கைகள் உட்பட தேர்தல் நடைமுறையில் உண்மையான சீர்திருத்தங்களை நாங்கள் கோருவோம்.”

“தூய்மையான தேர்தல் நடைமுறையால் மட்டுமே மலேசியாவில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும்.”

“மலேசியக் குடிமக்களில் பெரும்பான்மையோரை சிறுபான்மையினர் ஆளுவதற்கு அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் அது உண்மையில் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு இழப்பாகும்,” என லிம் வலியுறுத்தினார்.