‘கறுப்பு 505’ பேரணி ஜுன் 15ல் கோலாலம்பூரில் நிகழும்

anwarமே 5ம் தேதி நடந்த 13வது பொதுத் தேர்தலில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் மோசடிகளுக்கு எதிர்ப்பு  தெரிவிக்கும் பொருட்டு பக்காத்தான் ராக்யாட் கோலாலம்பூரில் பேரணி ஒன்றை நடத்தவிருக்கிறது.

“ஜுன் 15ம் தேதி மாலை கோலாலம்பூரில் அமைதியான பேரணியை நடத்தும் முயற்சிக்கு ஆதரவளிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்,” என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று  நிருபர்களிடம் கூறினார்.

அவர் பக்காத்தான் தலைமைத்துவ மன்றக் கூட்டத்துக்குப் பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

அந்தப் பேரணி அமைதியாக நிகழ்வதை உறுதி செய்ய தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு
பாக்காருடனும் மற்ற பாதுகாப்பு அமைப்புக்களுடனும் பக்காத்தான் தொடர்பு கொள்ளும் என்றும்
அன்வார் சொன்னார்.anwar1

அந்தப் பேரணி அரங்கத்தில் நிகழுமா அல்லது தெரு ஆர்ப்பாட்டமாக இருக்குமா என அவரிடம்  வினவப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், பேரணிச் செயலகம் விவரங்களை விரைவில் வழங்கும்  எனச் சொன்னார்.

தேர்தலில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் மோசடிகளுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் எதிர்ப்புக்  கூட்டங்களின் தொடர்ச்சியாக கோலாலம்பூர் பேரணி அமையும்.

‘கறுப்பு 505’ என பெயரிடப்பட்டுள்ள அந்தப் பேரணி மே 8ம் தேதி சிலாங்கூர் கிளானா ஜெயா  அரங்கத்தில் முதலில் தொடங்கியது.

கோலாலம்பூரில் ஜுன் 23ம் தேதி பக்காத்தான் ராக்யாட் தனது எல்லா நாடாளுமன்ற, சட்டமன்ற
உறுப்பினர்களுக்கும் ஒரு நாள் மாநாட்டை கோலாலம்பூரில் நடத்தும் என்ற தகவலையும் அன்வார்
அறிவித்தார்.

பக்காத்தான் கட்டுக்குள் உள்ள மாநிலங்களில் தேர்தல் மோசடிகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவதை
விசாரிக்க மாநில விசாரணைக்குழுவை அமைக்கலாம் என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்
தெரிவித்த யோசனையையும் பக்காத்தான் கூட்டணி ஏற்றுக் கொண்டது.

என்றாலும் பினாங்கு, சிலாங்கூர், கிளந்தான் ஆகிய மூன்று மாநிலங்கள் அத்தகைய குழு தேவையா
என்பதை பரிசீலிப்பதை அது பொறுத்துள்ளது.