சங்க இலக்கிய நூல்கள் 12 ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு

vaidehi_tamil_scholar_indiaசங்க இலக்கியத்திலுள்ள பதினெட்டு நூல்களில், பன்னிரெண்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதற்காக தமிழகத்தின் தூத்துக்குடியைச் சேர்ந்தவரும் தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருபவருமான வைதேகி ஹெர்பர்ட் அவர்களுக்கு கனடாவின் டொரண்டோ பல்கலைகழகமும், தமிழ் இலக்கியத் தோட்டமும் விருது ஒன்றை வழங்கி கௌரவித்துள்ளன.

சங்க இலக்கியமே தமிழின் அடிப்படை இலக்கியம் என்றும் அதில் இன்றைக்கு பழக்கத்தில் இல்லாத பல சொற்கள் இருப்பதால் அதன் மொழிபெயர்ப்பு மற்ற இலக்கிய மொழிபெயர்ப்புகளை விட மிகவும் சிக்கலும் சிரமமுமான ஒன்று என பிபிசி தமிழோசைக்கு வழங்கிய சிறப்பு பேட்டி ஒன்றில் வைதேகி ஹெர்பர்ட் தெரிவித்தார்.

உதாரணமாக விறலி எனும் சொல்லுக்கு நேரடியாக ஆங்கிலத்தில் ஒப்பான சொல் இல்லை என்றும் அப்படியான வார்த்தைகளை மொழிபெயர்ப்பு செய்யும் போது கூடுதல் சிரமங்கள் தோன்றின எனவும் அவர் மேலும் கூறுகிறார்.

தமிழ் மொழிக்கு செம்மொழி எனும் அங்கீகாரம் கிடைத்திருந்தாலும் தொடர்ச்சியாக வந்த தமிழக அரசுகள் சங்க இலக்கியத்துக்கு போதிய அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இதுவரை சங்க இலக்கியத்தின் பன்னிரெண்டு படைப்புகளை மொழிபெயர்த்துள்ள வைதேகி இதர ஆறு படைப்புகளையும் அடுத்த ஆண்டு(2014) இறுதிக்குள் முடித்துவிட திட்டமிட்டுள்ளதாகவும் மேலும் கூறுகிறார்.

பதிற்றுப்பத்தை முதல் முறையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதாகக் கூறும் அவர், அப்போது பெரும் சவால்களை எதிர்கொண்டதாகவும் கூறுகிறார்.

சங்க இலக்கியத்தை பொறுத்தவரையில் இதுவரை யாருமே ஒரு நூலுக்கு மேல் மொழிபெயர்த்தது கிடையாது எனக் கூறும் அவர், தன்னுடைய மொழிபெயர்ப்பு படைப்புகளில் வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலத்தில் பொருள் சொல்லியுள்ளதாகவும் தமிழோசையிடம் தெரிவித்தார்.

தன்னுடைய முல்லைப்பாட்டு மற்றும் நெடுநெல்வாடை ஆகிய இரு நூல்களின் மொழி பெயர்ப்பையும் அமெரிக்க வாழ் தமிழறிஞர் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டும், பதிற்றுப்பத்தை டோக்கியோ பல்கலைகழகப் பேராசிரியர் டாக்கநோபு டாக்காஹாஷியும் மேற்பார்வை செய்து சான்று வழங்கியுள்ளார்கள் எனவும் அவர் சொல்கிறார்.

தனது மொழிபெயர்ப்புகள் வர்த்த ரீதியில் எவ்வித பலனையும் அளிக்காது என்பதை தான் நன்கு உணர்ந்துள்ளதாகவும் வைதேகி ஹெர்பர்ட் கூறுகிறார்.

-BBC

TAGS: