“தமிழ்ப்பள்ளி என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா”, தமிழ்ப்பள்ளி 200 ஆண்டு விழா

 

Tamil200y6மலேசிய நாட்டில் ஒரு பள்ளியின் ஒரு வகுப்பில் தொடங்கப்பட்ட தமிழ்க்கல்வி கற்பித்தல் 200 ஆண்டை எட்டிவிட்டது. அந்த 200 ஆண்டு வரலாற்று கொண்டாட்டம் ஒரு தமிழ்க்கல்வி மாநாட்டின் வழி அக்டோபர் 31, 2015 இல் மலாயாப் பல்கலைலக்கழகத்தில் காலை மணி 9.00 லிருந்து மாலை மணி 5.00 வரையில் கொண்டாடப்பட்டது.

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் 200 ஆண்டு கால வரலாறு விழாக்கோலம் காண்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மலேசியத் தமிழ் அறவாரியம் முன்நின்று செய்தது.

மேற்கு மலேசியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து 500 க்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர். அவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மு. குலசேகரன் மற்றும் சார்ல்ஸ் சந்தியாகோ ஆகியோரும் அடங்குவர்.

 

தமிழ்க்கல்வி வளம் பெற உழைத்தவர்களுக்கு நன்றி

 

R.Saravanan

 

1816 இல் விதைக்கப்பட்ட விதை இன்று நாடு தழுவிய அளவில் வளர்ந்து வேரூன்றி நிற்பதற்கு பலர் உழைத்தனர். அவர்களுக்கு நன்றி கூறி மாநாட்டில் பங்கேற்க வருகையளித்திருந்த பெருமக்களை மலேசியாவில் 200 ஆண்டுத் தமிழ்க்கல்வி மாநாட்டுச் செயற்குழுத் தலைவர் சரவணன் இராமச்சந்திரன் வரவேற்றார்.

தமிழும் தமிழ்க்கல்வியும் நம்மை வளப்படுத்தியுள்ளன.  தொடர்ந்து தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழை, தமிழ்க்கல்வியை மேலும் வளப்படுத்தி அடுத்தத் தலைமுறையிடம் ஒப்படைப்பது நமது கடமை என்றாரவர்.

 

 

“தமிழ்ப்பள்ளி என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா”

 

A.Ragahvan“இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வகுப்பறையில் தொடங்கிய தமிழ்க் கல்வி கற்பித்தல் இன்று நாடு தழுவிய அளவில் ஓர் இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களையும், பத்தாயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர்களையும், ஐநூற்று இருபத்திநான்கு தமிழ்ப்பள்ளிகளையும் கொண்ட ஒரு சக்தியாக உருவெடுத்துள்ளது. இதற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வித்திட்டவர் வணக்கத்திற்குரிய ரோபர்ட் ஸ்பார்க்கி ஹட்சிங்ஸ். அவருக்கு இந்நாட்டு மக்கள் சார்பாகவும், தமிழ் அறவாரியத்தின் சார்பாகவும், தமிழ்ப்பள்ளிகள், அவற்றின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் நான் அவரை இன்று நினைவுகூர்ந்து எனது உணர்வுப்பூர்வமான வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்”, என்று மலேசியத் தமிழ் அறவாரியத்தின் தலைவர் அ. இராகவன் அவரது தொடக்க உரையில் கூறினார்.

 

“கடந்த இருநூறு ஆண்டுகளில் தமிழ்க்கல்வி நடந்து வந்த பாதை பட்டுநூலால் போடப்பட்டதல்ல. அது கடினமான, கொடூரமான பாதையில் பயணித்தது, பயணித்துக் கொண்டிருக்கிறது. இப்பயணத்திற்கு தங்களால் இயன்றதை எல்லாம் செய்த சாதாரண தோட்டத் தொழிலாளர்கள், நகர்புறத் தொழிலாளர்கள், தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், தமிழ் ஊடகங்கள், இதர தொழிற்கல்வி பயின்றவர்கள் மற்றும் கோ. சாரங்கபாணி போன்ற முன்நிலைப் போராட்டவாதிகளையும் நாம் இன்று நினைவுகூர்ந்து அவர்களுக்கு நமது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்”, என்று இராகவன் மேலும் கூறினார்.

“தமிழ்க்கல்வியும் தமிழ்ப்பள்ளியும் தொடர்ந்து இருக்க வேண்டும். இது தமிழையும் தமிழ்ப்பள்ளியையும் இதுவரையில் காட்டிக்காத்த நமது முன்னோர்களுக்கு நாம் செலுத்த வேண்டிய நன்றிக்கடனாகும். நமது எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமையுமாகும்”, என்பதை அவர் நினைவுறுத்தினார்.

“தமிழையும் தமிழ்ப்பள்ளியையும் அழிக்க கொழுத்த கழுகுகள் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றை விரட்டியடித்து தமிழையும் தமிழ்ப்பள்ளியையும் நிலைநிறுத்த இருநூறு ஆண்டிற்கொருமுறை மக்களை சந்திக்காமல் அன்றாடம் நாடு தழுவிய அளவில் மக்களைச் சந்தித்து ‘தமிழ்ப்பள்ளி என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா’ என்ற உணர்வை ஊட்டிக் கொண்டே இருக்க வேண்டும்”, என்றாரவர்.

“நாம் தமிழும் தமிழ்ப்பள்ளியும் இமயம் போல் வளர்ந்து, உயர்ந்து நிற்பதைக் காண விரும்புகிறோம். நமது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் எவருக்கும் இளைத்தவர்கள் அல்லர். அவர்களிடையே இமயத்தைத் தொடும், அட்லாண்டிக் மாகடலை கடக்கும், விண்ணுலகத்தின் வாசலைத் தட்டும் சாதனைகளைப் படைப்பவர்கள் நிச்சயமாகத் தோன்றுவார்கள். நம்மிடையே அப்துல் கலாம்கள் இருக்கிறார்கள் என்பது எனது நம்பிக்கை. அவர்கள் முன்னேறுவதற்கு ஆவன செய்ய வேண்டியது நமது கடமை”, என்பதை இராகவன் அவரது உரையில் வலியுறுத்தினார்.

 

கட்டுரைகள்

 

இம்மாநாட்டின் சிறப்பான அம்சங்களில் ஒன்று தமிழ்க்கல்வியின் தோற்றம், வளர்ச்சி, வரலாறு மற்றும் தமிழ்க்கல்வியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் திட்டங்கள் பற்றிய கட்டுரைகள் தயாரிக்கப்பட்டு அவற்றை மாநாட்டு மலரில் இணத்துள்ளதாகும்.

அக்கட்டுரைகள்:

1. *மலேசியாவில் தமிழ்க்கல்வி – சோ. சுப்பிரமணி

2. மலேசியாவில் தமிழ்க்கல்வியின் வரலாறும் வளர்ச்சியும் – ராகிணி ராமதாஸ்.

3. மலேசியாவில் தமிழ்க்கல்வி வரலாறு – மீனாட்சி முனியன்.

4. இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய மலேசியத் தமிழ்க்கல்வி – சாமிக்கண்ணு ஜெபமணி ஈசாக்கு சாமுவேல் மற்றும் மேகவர்ணன் ஜெகதீசன்.

5. *தமிழ்க்கல்வி: சவால்களும் இலக்குகளும் – கு. நாராயணசாமி

6. **மலேசியத் தமிழ்க்கல்வியும் சவால்களும் – கலைச்செல்வி இரத்னம்.

7. தமிழ்க்கல்வியும் சவாலும் – பொன் சேகர்

8. *தமிழ்ப்பள்ளிகள் மீதிலான உளவியல் தாக்கங்கள் – நாகப்பன் ஆறுமுகம்.Group

9. தொடக்கத் தமிழ்க்கல்வியும் மூளைத்திறன் அதிகரிப்பும் – கா. ஆறுமுகம்.

10. தமிழ்மொழி வளர்ச்சியில் தமிழர் பங்கு – சரவணன் இராமச்சந்திரன்.

11.  தமிழ்மொழி மீது இடைநிலைப்பள்ளி மாணவர்களின் மனப்பாங்கு – செல்வஜோதி இராமலிங்கம்.

12. மலேசியப் பல்கலைக்கழகத் தமிழ்மொழி – கார்த்திகேஸ் பொன்னையா.

13. **இடைநிலைப்பள்ளி தமிழ்க்கல்வியின் சவால்களும் தீர்வுகளும் – மலர்விழி சின்னையா, தனலெட்சுமி பெருமாள், பொன்னியம்மா முனியாண்டி – பரமசிவம் முத்துசாமி.

14. **21 ஆம் நூற்றாண்டின் மலேசியத் தமிழ்க்கல்வி: ஒரு கண்ணோட்டம் – தனேசு பாலகிருட்டினன்.

15. தமிழ்க்கல்வியின் எதிர்காலம்: தகவல் நுட்பம் – சி.ம.இளந்தமிழ்.

16. தமிழ்க்கல்வி நிலைத்தன்மைக்குத் தொடர் நடவடிக்கைகள் – வசந்தன் பெருமாள்.

17. *மலேசியக் கல்விப் பெருந்திட்டம் 2013-2025 – ஜீவி காத்தையா.

மேற்கூறப்பட்டுள்ள கட்டுரைகள் அனைத்தும் மாநாட்டு மலரில் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றில் *இக்குறியிடப்பட்டுள்ள நான்கு கட்டுரைகள் மாநாட்டில் கட்டுரையாளர்களால் மிகச் சுருக்கமாக வாசிக்கப்பட்டன.

மேலும், **இக்குறியிடப்பட்டுள்ள கட்டுரைகளின் ஆசிரியர்கள் அவர்களுடையக் கட்டுரைகள் பற்றி சுருக்கமாக விவாதித்தனர்.

 

தமிழ்ப்பள்ளிகள் வெற்றிக் கதை

 

தேசிய-வகை ரிங்லெட் தமிழ்ப்பள்ளி, தேசிய-வகை  நீலாய் தமிழ்ப்பள்ளி, தேசிய-வகை வாட்சன் தமிழ்ப்பள்ளி மற்றும் தேசிய-வகை பாயா பெசார் தமிழ்ப்பள்ளி ஆகியவற்றின் வெற்றிக் கதைகளை அவற்றின் கதாநாயகர்கள் விவரித்தனர்.

 

கருத்தரங்கம்: தமிழ்ப்பள்ளியும் தமிழ்க்கல்வி வளர்ச்சியும்

 

இந்நிகழ்ச்சியில், 1.தமிழ்ப்பள்ளி எண்ணிக்கையை நிலைநிறுத்துதலும் தமிழ்க்கல்வியின் தரம் உயர்த்துதலும் என்ற தலைப்பில் சி. பசுபதி, 2. 7எ அடைவுநிலை ஒரு கண்ணோட்டம் என்ற தலைப்பில் வே. இளஞ்செழியன், 3. அறிவு வளர்ச்சிக்கு பன்மொழிப்பயன்பாடு என்ற தலைப்பில் கா. ஆறுமுகம், மற்றும் 4. தமிழ்மொழி கற்றல் தரம் என்ற தலைப்பில் க. திருச்செல்வம் ஆகியோர் அவர்களுடையக் கருத்துகளை முன்வைத்து வாதிட்டனர்.

 

தீர்மானங்கள்

 

இத்தமிழ்க்கல்வி மாநாட்டில் கீழ்க்கண்ட மிக முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:Selva

  1. தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து இருப்பதை உறுதிசெய்தல்.
  2. இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்மொழிப் பாடம் கட்டாயப் பாடமாக்கப்படவேண்டும்.
  3. இடைநிலைப்பள்ளிகளில் முழுநேர தமிழாசிரியர்கள் இருப்பதை உறுதிசெய்தல்.
  4. தமிழ்ப்பள்ளியும் தமிழ்க்கல்வியும் அரசுக் கடமை என்பதை அறிவுறுத்தல்.
  5. தமிழ்ப்பள்ளிகளின் இடமாற்றம் மக்களின் தேவைக்கேற்ப அமைக்கப்பட வேண்டும்.
  6.  முழுத் தங்கும் விடுதி வசதிகொண்ட தமிழ்ப்பள்ளிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்பட வேண்டும்.
  7. தமிழ்ப்பள்ளிகளில் பாலர்பள்ளிகள் கட்டாயம் அமைக்கப்பட வேண்டும்.
  8. தமிழ்மொழிக் காப்பகம் மலேசியக் கல்வி அமைச்சால் உருவாக்கப்பட வேண்டும்.

 

 

Displaying DSC_0278.JPG