அன்வார் பிரதமரானால் இந்தியர்கள் பிரச்சனை தீருமா?

பாண்டியன்: மக்கள் கூட்டணியின் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமரானால், இந்தியர்களின் பிரச்சனைகள் தீர்ந்து விடுமா?

கோமாளி: பலே, பாண்டியா! தேசிய முன்னணியை புறக்கணித்துவிட்டு, மக்கள் கூட்டணியை வெற்றி பெறச் செய்தால் அன்வார் பிரதமராக ஆகும் வாய்ப்புள்ளது. அதே சமயம் குதப்புணர்ச்சி வழக்கு முடிவை முறையீட்டு நீதிமன்றம் மாற்றினால், நிலைமை மாறும்.

இந்தியர்களின் பிரச்சனைகளை தீர்க்கும் வழிமுறைகளை யார் மேற்கொள்வது? அது பிரதமரின் பொறுப்பா அல்லது நாட்டு மக்களின் பொறுப்பா?

இன அடிப்படையிலான தீர்வுகளையே மக்கள் கூட்டணியும் மேற்கொண்டால், இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காது. காரணம், இன அடிப்படையில் பெரும்பான்மை வகிக்கும் இனங்கள் அதில் தங்களது தேவைகளை அடக்கி விழுக்காடு அடிப்படையிலே பயனடைவர்.

மேலும், 1972ஆம் ஆண்டு முதல் அரசாங்கம் மேற்கொண்ட இனவாத அரசியல்முறை இன்று ஆழமாக வேரூன்றி விட்டது. இன்று எங்கும் எதிலும் மலாய்க்காரர்களை முன்னிலைப்படுத்தும் கொள்கைகள் வலுவாக்கப்பட்டுள்ள அதே வேளையில், அமுலாக்க துறைகள் அனைத்தும் அவர்கள் கட்டுப்பாட்டிலும் ஆதிக்கத்திலும் உள்ளன.

மக்கள் கூட்டணியின் வலுமை பெரும்பான்மை மலாய்க்காரர் அல்லாதவர்களின் ஆதரவோடும் சிறுபான்மை மலாய்க்காரர்கள் ஆதரவோடும் உருவாக்கம் கண்டு வருகிறது. இந்த நிலைமையில் நாட்டின் மேம்பாட்டிற்கு நம்பிக்கை கொடுக்கும் வழிமுறைகளை கொள்கைகளாக உருவாக்க இனங்களுக்கிடையிலான இணக்கம் அவசியம். அதில் மலாய்க்காரர்களின் பங்கு அத்தியவசியமானது.

2008ஆம் ஆண்டின் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நஜீப் மேற்கொண்ட நடவடிக்கைகள், பல்லின மக்களை ஒன்றிணைக்கும் செயல் வடிவத்தை கொண்டதாகும். ஆனால், அவை அம்னோவின் ஆதரவோடு உண்டான நிரந்தர தீர்வா? அல்லது அரசியல் நாடகமா? என்பதை தற்போது தீர்மானிக்க இயலாது.

அதேவேளை, மக்கள் கூட்டணி ஆட்சி அமைத்தால், அடிப்படையான பல பிரச்சனைகளுக்கான தீர்வு கோரி அனைத்து தரப்பினரும் விவாதம் செய்வர். பெரும்பான்மை என்ற இனம் தொடர்ந்து இனவாத கொள்கைகளை மட்டுமே கொண்டு அரசியல் நடத்த இயலாது என்ற நிலையும் உருவாகும்.

எனவே, இன அரசியலால் பல பிரிவினைகளை தன்னுள்ளே கொண்டுள்ள அரசாங்க கொள்கைகளிலேயும் நிர்வாக முறைகளிலேயும் மாற்றங்களை கொண்டு வர நாம் மேற்கொள்ளும் முக்கிய நடவடிக்கை ஓரினத்தின் ஆதிக்கத்தை அகற்றுவதாகும்.

அன்வார் இதனை அகற்ற அருக்கு மலாய்காரர்களின் ஆதரவு இருக்கவேண்டும். அதை அவரால் பெற இயலுமா? இந்தியர்-சீனர்களின் தேவைகளை பூர்த்திசெய்ய, இவ்வளவு காலம் பெற்ற சிறப்புச் சலுகைகளை மலாய்க்காரர்கள் விட்டுக்கொடுப்பார்களா?

அவ்வகையில் அம்னோவின் ஆதிக்கம் அகற்றப்பட்டால் அதை நிறைவு செய்யும் வகையில் உள்ள மலாய் காரர்கள் அதிகம் உள்ள மக்கள் கூட்டணி கட்சிகள் அடிப்படை கொள்கை மாற்றங்களை உருவாக்க வேண்டும். ஆனால், தற்சமயம் அதற்கு வாய்ப்புள்ளதாக கருத இயலாது.

இருப்பினும், அப்படிப்பட்ட சூழல், மக்களின் சனநாயக சுவாசத்திற்கு அதிக இடைவெளியை அளிக்கும். உரிமை, நீதி, நியாயம் போன்றவை வெளிப்படையான விவாதமாக எழும். இதன்வழி மலேசிய மக்களின் அரசியல் விழிப்புணர்ச்சி மேம்பாடடையும். இவ்வகையான சூழல் மட்டுமே இந்தியர்களின் பிரச்னை என்றில்லாமல், இந்நாட்டு மக்களின் பிரச்னைகளை தீர்க்ககூடிய நிலையை உருவாக்கும்.

இது நிகழ வேண்டுமானால், அன்வார் போன்றவர்கள் அவசியமே!