பாரிசானின் தோல்வி காலத்தின் கட்டாயம்!

ரஜிப்: கோமாளி, பாரிசான் புத்ரஜெயாவை இழக்குமா?

கோமாளி: ரஜிப், உனக்கு கிலி பிடித்துவிட்டதுபோல் இருக்கிறது உனது கேள்வி. “நான் என்ன பிரதமரா? கிலி பிடிப்பதற்கு” என்று கேட்பதும் எனது காதில் விழுகிறது. நீ பிரதமராக இல்லாவிட்டால் கூட, மத்திய அரசை ஆளும் பாரிசானை கொண்டு நாட்டை சுரண்டும் பலருக்கு முன்பே கிலி பிடித்துவிட்டது.

ரஜிப், எதைப்பயிர் செய்கிறோமோ, அதைத்தான் அறுவடை செய்ய இயலும். வினையை விதைப்பவன் விமையைத்தான் அறுப்பான். கண் கெட்ட பின் சூரிய வழிபாடு “பழைய குருடி கதவை திறடி” என்று மீண்டும் பாரிசானை வரவேற்ற கதவை திறக்கும்படி தட்டும்போது, கதவைத் திறக்கலாமா? அதன் பிதிபலன் என்னவாக இருக்கும்?

என்ன ரஜிப், கோமாளி பள்ளிப் பிள்ளைகளுக்கு பாடம் நடத்துவது போல் பதில் அளிக்கிறேன் என்று பார்க்கிறாயா?

எதையுமே, ஆராயும்போது அடிப்படையிலிருந்து பார்க்கவேண்டும். வீட்டில் உள்ள தண்ணீர் குழாயில் நீர் கசிந்தால், கசியும் நீரை துடைத்து விட்டாலோ அல்லது துடைப்பதற்கு ஓர் ஆளை நியமித்தாலோ, பிரச்சனை தீராது. குழாயின் ஓட்டையை அடைக்க வேண்டும். அல்லது குழாய் மிகவும் பழமையாக இருந்தால் அதை மாற்ற வேண்டும்.

மலேசியாவை பொறுத்தமட்டில் மக்கள் “பொறுத்தது போதும், பொங்கி எழு” என்ற பராசக்தி வசனத்தைதான் தினமும் முனுமுனுத்துக் கொண்ருக்கிறார்கள். விஷம் (விசம்!) போல் ஏறும் விலைவாசி ஆனால் ஏறாத வருமானம், ஏறும் கடன் தொல்லை, இவைகளுக்கிடையே கோடி கோடியாக உபரி இலாபம் பெறும் வாணிப நிறுவனங்கள்.  தினமும் ஆயிரக்கணக்கில் வேலைக்காக வந்திறங்கும் அயல்நாட்டு தொழிலாளர்கள் ஆனால், உருப்படியான வேலையில்லாமல் பகுதி நேர வேலை செய்தும் வயிற்றை காயப்போடும் நம் நாட்டு மக்கள். கடல் கொள்ளையர்கள் அற்ற கடலுக்கு கோடிக்கணக்கில் பணம் செலவழித்து நீர் மூழ்கி கப்பல்கள், ஆனால் சாலையோர கைப்பைகளை திருடி ஓடுபவர்களை பிடிக்க நாதியில்லை. வானுயர கட்டிடங்கள், மாபெரும் விமான நிலையம், கோடிக்கணக்கான பணம் கொண்டு பூமிக்கடியில் இலகு ரயில். அண்டவெளிக்கு ஆள் அனுப்புவோம், விரைவுக்கார் பந்தயம் வைப்போம் ஆனால் தமிழ்ப்பள்ளிகளை புறக்கணிப்போம், ஏழை மக்களுக்கு வீட்டுவசதியென்று புறாக் கூண்டுகள் போன்ற அடுக்கு மாடிகளில் அடைத்து வைப்போம்.

மருத்துவ வசதியை தனியார் மயமாக்கி, கல்விக் கொள்கையை வியாபாரமாக்கி இன்று அரசாங்க கடன் என்ற நிலையிலே வேலைக்கு செல்லும் முன்பே படிக்கும் ஒவ்வொருவரும் கடனாளியாகவே வெளியாகிறார்கள்.

இவையெல்லாம் போதாதென்று அதிகமாக சம்பாதிக்கும் நபர்கள் அதிகம் வரி செலுத்தும் நிலையை அகற்றி முதலீட்டை ஊக்குவிக்க வரி சலுகை என்று அதைக்குறைத்து பொதுமக்கள் வழி அதிக வரி வசூலிக்க GST என்ற வரி திட்டமும் உண்டு. தேர்தல் என்பதால் நாடாளுமன்றத்தில் அது தற்காலிகமாக மறைத்து வைக்கப்பட்டது.

ரஜிப், இப்போ சொல்லு, என்ன நடக்கும்? உலக அளவிலே மக்களின் சிந்தனை வெகுவாக மாறி விட்டது. “இப்படிப் போட்டு, அப்படி எடுப்பது” இனி செல்லாது. வலுக்கட்டாயமாக ‘நம்புங்கள்’ என்ற ஆதிக்க கோரிக்கையை கேட்கும் போதெல்லாம், நினைவு வருவது “மாற்றம் என்பது காலத்தின் கட்டாயம்” என்பதுதான்.