எவ்வளவு கொடுத்தா ஓட்டு போடலாம்?

முனியம்மா: கோமாளி தம்பி, எனக்கு இப்போ எழுபது வயசு. எனக்கு தெரிந்த எல்லா தேர்தலிலும், ஏதோ கொடுக்கிறத நம்பி ஓட்டு போட்டேன். இந்த தேர்தல் வர்ரதுக்கு முன்பே 500 கிடைச்சது. இன்னும் எவ்ளோ கொடுத்தா திருப்பியும் அவங்களுகே ஓட்டுப் போடலாம்?

கோமாளி: அக்கா முனியம்மா, எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு ஓட்டு மட்டும், அவர்களுக்கு போடாமல், அந்த விலையற்ற உரிமையை நிதானமாக பயன்படுத்துங்கள் என்பது ஒரு வாதம்.

முனியம்மா, ஓட்டு என்பது நாம் ஒருவருக்கு கொடுக்கும் அதிகாரம். அந்த அதிகாரத்தை தொடர்ந்து பெறுபவருக்கு அதிகார மப்பு (போதை) உண்டாகி விடும். அதிகாரப் போதையில் சுகம் கண்டவர்கள் அதை சுலபமாக விட மாட்டார்கள். காரணம், அந்த அதிகாரம்தான் பணம், சொத்து, சொகுசான வாழ்க்கை, விலையுயர்ந்த கார், வெளிநாட்டுப் பயணம், முதலீடு, பெரிய வீடு, சின்ன வீடு, வேலையாட்கள், அடியாட்கள், கூத்து, கும்மாளம் இப்படி எல்லாமே!

முனியம்மா, இவையெல்லாம் எப்படி உங்களது ஓட்டை தொடர்ந்து பெறுபவர்களுக்கு கிடைக்கிறது? நீங்கள் ஒருவருக்கு ஓட்டு போடும்போது, நீங்கள் உங்களின் எதிர்காலத்தை அவர்களுக்கு தாரை வார்த்து கொடுத்து விடுகிறீர்கள். உங்களை அவர்கள் எப்படி பார்க்க வேண்டும்; எப்படி நடத்த வேண்டும்; உங்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பது; நீங்கள் வீடு வாங்க முடியுமா; உங்கள் பிள்ளைகள் படிக்க முடியுமா; உருப்படியான உணவு கிடைக்குமா; உங்களை எப்படி பிழிந்து, எப்படி பாதுகாத்து மீண்டும் உங்களை கொண்டு தங்களது அதிகாரத்தை எப்படி பெறுவது என்பதையெல்லாம் முனியம்மா, இந்த ஓட்டு என்பதை அவர்களுக்கு தொடர்ந்து போடுவதால் கிடைக்கும் அதிகாரத்தை கொண்டே மீண்டும் பெரும் அதிகாரமாகும்.

முனியம்மா, உங்களிடம் ஓர் ஆட்டுப் பண்ணையிருந்தால் என்ன செய்வீர்கள்? வேலிபோட்டு, தீனிபோட்டு கவனமாக பாதுகாப்பீர். காரணம் அந்த உயிர்கள் உங்களுக்கு அடிமை. அவை உங்களின் சொத்து. அதை நீங்கள் பாதுகாப்பது அதன் பாலுக்கும் மாமிசத்துக்கும், அதன்வழி வரும் வருமானத்திற்கும். அவைகளிடம் நீங்கள் கெஞ்சி குலாவுவது அதிலிருந்து நீஙகள் கரக்கும் பணம் பண்ணும் வேலை. ஆடுகளுக்கு விடுதலை கிடைக்காது. அவை கடைசியில் கசாப்பு கடையில்தான்  முடிவடையும்.

முனியம்மா, நம்மை போன்றோரும் அந்த ஆடுகள் போலத்தான். யோரோ சுகமாக வாழ நமது வாழ்க்கையை அர்பணிந்து உழைத்து கெஞ்சிப் பிழைத்து, அடிபணிந்து தோட்ட மேம்பாட்டின்போது துரத்தப்பட்டு, நமது கோயில்கள் உடைபடும்போது கடவுளை நம்பி மண்ணை மட்டுமே வாரி வீசி மனதில் திருப்தி கொண்டு, கிடைக்கும் இடங்களில் தஞ்சம் புகுந்து இன்றும் வாழ்கிறோம். கடனாளியாக, அடிமைகாளக, ஏழையாக ஒதுக்கப்பட்டவர்களாக.

இதற்கு காரணம், முனியம்மா, நாம் ஆடுகள் என நினைத்து அவர்கள் தீனி போடும்போது, நாம் ஆடுகளாகவே மீண்டும் மாறி விடுவதுதான்.

நாம் ஆடுகளும் அல்ல, நமது இனம் ஆட்டு மந்தையும் அல்ல. நாம் விடுதலை கோரும் மனிதர்கள். இந்நாடு நமக்கு வேண்டும். இந்நாட்டின் வளம் நமக்கும் சொந்தமானது அதில் நாம் அனைவருமே மனிதர்களாக வாழ வேண்டும் இந்த வேட்கை உருவாகவிட்டால் நமக்கு விடுதலையும் கிடையாது, விமோசனமும் கிடைக்காது.

முனியம்மா, இப்போ புரியும் நீங்கள் ஓட்டு போட ஏன் பணம் கொடுக்கிறார்கள் என்று.

உணவுவில்லாமல் தூண்டிலில் மீன் சிக்காது?

இறுதியாக முனியம்மா, நமது நாடு ஒரு பணக்கார நாடு. போதுமான வளமும்-பணமும் உள்ளது. இவையெல்லாம் மக்களுக்கு கிடைக்காது. இவையெல்லாம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் மக்கள் போராட வேண்டும். அதிகார போதையில் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளவர்களை எதிர்க்க வேண்டும். அது மட்டுமே நமது விடுதலைக்கான புரட்சி.

இதை சுலபமாக செய்ய இயலாது. ஆனால் நம்மிடம் உள்ள ஒரு வழிமுறை, அதுவும் ஒரே வழிமுறைதான் உள்ளது.

அதுதான் ஓட்டுரிமை.

முனியம்மா, உனது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை செய். இந்நாள்வரை நீ வாழ்ந்ததை நினைவு கூரப்பட்டது போதும். மீண்டும் அவர்களுக்கே ஓட்டு போட வேண்டுமா?