சிந்திக்க தெரிந்தவர்கள் சிந்திக்கட்டும்; இது எனது கருத்து!

இது எனது கருத்து, நான் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கு முன்பே செம்பருத்தி மாத இதழை வாங்கி தவறாது படிப்பேன். அதிலிருந்து தான் ஈழ தமிழர்களின் உணர்வுகள், நம் நாட்டின் இந்தியர்களின் அவல் நிலையை படித்து உணர்ந்தேன்.

அப்போது ஈராயிரமாண்டு நான் எஸ்டிபிஎம் படித்துக் கொண்டிருந்தேன், கணிதமும் அறிவியலையும் ஆங்கிலத்தில் போதிக்க வேண்டும் என அப்போதைய பிரதமர் தாய் மொழி கல்வியைப் புதைக்க குழி வெட்டிக்கொண்டிருந்தார்.

மாணவனாக இருந்த போது என்னுள் புதைந்துக் கொண்டிருந்த உணர்வை எழுப்ப செம்பருத்தி காரணமாக இருந்தது. என்னைப் போல் தமிழ் படித்து பல்கலைக்கழகம் சென்ற பலருடைய எழுச்சிக்கு காரணம் செம்பருத்தியில் இடம் பெற்ற சமுதாய ஆய்வுக் கட்டுரைகளே.

சமீபத்தில் உருவான இண்ட்ராப் எந்த முறையிலும் எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் எழுச்சியை தூண்டவில்லை. எழுச்சி பெற்ற நாங்கள் எங்களால் முடிந்தவற்றை பிறருக்கு அறிவிக்கவும், சமுதாய அறப்பணிகளிலும் எங்களை ஈடுபடுத்திக் கொண்டோம்.

இதற்கு காரணமாக இருந்த செம்பருத்தியின் ஆசிரியர்களை தலைவர்களாக தலையில் தூக்கி வைத்து ஆடவில்லை அப்படி பார்க்கவும் இல்லை. மாறாக, ஒரு வழிகாட்டியாக அவர்களது எழுத்துக்களை எடுத்துக் கொண்டோம்.

உணர்ச்சிபூர்வமாக இரண்டே விடயத்தை மையமாக கொண்டு உருவானது இந்த இண்ட்ராப், போலிஸ் நிலையத்தில் இறந்த இந்தியர் கைதிகளுக்காக வாதாடுவதிலிருந்து ஆரம்பித்து, அடிமட்டத்தில் இருக்கும் மக்களிடமிருந்து (குற்றத்தில் ஈடுபடும் இந்திய ஏழைகள்)ஆதரவை பெற்றார் உதயா.

அதிகரிக்கும் குற்றச்செயல்களிலிருந்து நம் மக்களை காப்பாற்றாது, குற்றம் புரிபவர்களுக்காக வாதாடினார். காவல் துறையினரின் அதிக கெடுபிடியால் தன்னுடைய கவனத்தை கோவில் பக்கம் திருப்பினார். உணர்ச்சிவசப்பட வைக்கும்  இன்னொரு பிரச்சனை அது. மக்களை முன்னேற வைக்கப்படும் விடயங்கள் பல இருந்தும் நம் கவனம் உதயாவின் மேலே தான் இருந்தது. அதன் வழியாக வந்தது தான் இந்த இண்ட்ராப்.

உதயாவை குறை கூறவில்லை தமிழ் நாட்டில் உள்ளதைப் போல் உணர்ச்சிவசப்பட்டு ஒருவரை தலைவராக்கி விட வேண்டாம். நாட்டில் உரிமைக்காக போராடிய டேவிட், தற்போது அருட் செல்வம் என நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் இது போன்ற மக்கள் தனக்கு பின்னால் வருவதை விரும்பவில்லை, அறிக்கை விடுவதையும் விரும்பவில்லை.

உதயாவின் வேதாவின் முயற்சிக்கு நன்றி, அப்போது கல்வி அறிவு குறைந்து காணப்பட்ட மக்களை உணர்ச்சியுன் வழியாய் எழுப்பி விட்டதற்காக நன்றி, தற்போது தூர நோக்கு சிந்தனையுடன் இன பாடுபாடின்றி மலேசியன் என்ற உரிமையோடு, உரிமைகளை பெற்று கொள்ள எங்களை தயார் செய்துக் கொண்டிருக்கிறோம்.

பதின் மூன்றாவது பொது தேர்தல் அதற்கு களமாக அமையும், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு ஏற்ப அரசாங்கம் இன பாகுபாடின்றி உரிமைகளை சரியாக தந்தாலே நாம் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிடலாம்.

நமக்கு ஆளும் கட்சியை எதிர்க்கும் பலமான எதிர்கட்சி ஒன்று தேவை.  எப்போதும் ஆளும் கட்சியை எதிர்க்கும் எதிர்கட்சி பலமாக இருக்குமானால் சிறுபான்மையினர் உரிமையோடு வாழும் தன்மையை பெறுவர். சிலாங்கூர், பினாங்கு அதற்கு எடுத்து காட்டு. சிந்திக்க தெரிந்தவர்கள் சிந்திக்கட்டும். இது எனது கருத்து.

-நாதன்