சிண்டுமுடிக்கும் பத்திரிக்கைகள், இனி சீர்திருத்தம் செய்யட்டும்!

வெவ்வேறு திசைகளில் பயணம் செய்துகொண்டிருந்த நான்கு பத்திரிகைகளும் ஒரே குடையின் கீழ் வந்து நின்றது நமக்குள் ஏற்பட்ட பிரம்மையிலிருந்து மீண்டுவர மீளவும் ஏற்றுக்கொள்ள் மனம் மறுத்தாலும் காலம் அறிந்து பெய்த மழைபோல் சந்தோசப்படுவதைத் தவிர வேறொன்றைத் தேடி காரணங்கள் கற்பிக்க மனம் மறுக்கிறது.

ஒரு கும்பல் நாட்டைக் கொள்ளையடித்துக்கொண்டிருக்க இன்னொரு சாரார் வறுமையில் வாடும் அவலத்தையும் இந்த நாடு அனுபவித்துக்கொண்டுதான் வருகிறது என்ற் திரு. கா. ஆறுமுகம் அவர்களின் வரிகள் நாம் வாங்கிவந்த வரமோ என்று அய்யப்பாடும் கூடவே நமக்குள் எழத்தான் செய்கிறது.

நிறுவனங்கள், அரசாங்க அலுவலகங்கள், அரசு (ஏஜண்டுகள்) சார்ந்த சிறிய பெரிய தோட்டங்களின் வல்லான்கள் நம்மை ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கின்றன. இதுபோன்ற தில்லுமுல்லுகளை தெரிந்தவர்கள் தெரிந்தவர்களிடமே சொல்லிக்கொண்டிருப்பதைக் காட்டிலும் தெரியாத பாமரர்களுக்கு தெரிவிக்க வேண்டும். எப்படியாவது எந்த வடிவத்திலாவது அவர்களுக்குச் செல்லவேண்டும். எல்லாரும் பத்தரிக்கை படிப்பதில்லை. எல்லாரும் இணையத்தைப் பார்ப்பதில்லை. எல்லாருக்கும் இணையவழி நடப்புகளை தெரிந்துகொள்ளவும் முடியாது.

ஒரு சாதாரண பாமரனுக்கு ஒரு சினிமா பார்த்தவுடன் அந்த சினிமாவை முழுக்கவுமாக அந்த இரண்டு மணி நேரத்தில் உள்வாங்க முடிந்த அளவுக்கு அவனுடைய வாழ்வாதாரத்துக்கான இதுபோன்ற நாட்டு நடப்புகளை ஒருமாதமானாலும் அவர்களால் தெரிந்துகொள்ளமுடியவில்லை அல்லது முடிவதில்லை. அந்த அளவுக்கு நாம் பாழடைந்துபோய் உள்ளோம்.

இவர்களைப் போன்றவர்களுக்கு மிக எளிதாக நாட்டு நடப்பு சென்றடைய வழிதேடவேண்டும். வழிவகைகளைக் காணவேண்டும். இதுபோன்ற காலகட்டத்தில் இதற்கான அவசர நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். ஆலய மண்டபங்களில், தனியார் மண்டபங்களில் பட்டிமன்றங்களாகவும், சிறுசிறு குட்டி நாடகங்களாகவும் அவர்களுக்கு அறியப்படுத்தலாம்.

கம்யூனிச காலகட்டத்தில் இந்தியர்கள் வாழ்ந்த தோட்டப்புறங்களில் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சார நாடகங்களாக மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக தகவல் இலாகாவின் நாடகங்கள் நடந்தேறியதை பெரும்பாலோர் மறந்திருக்கமுடியாது. தமிழுக்கும் தமிழனுக்கும் விழா எடுப்பதை விடுத்து தமிழர்களின் வாழ்வாதாரத்துக்கு வழி காண்பதே நம்முடைய முதல் வேலையாக நாம் உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

இந்தக் காரியங்களுக்கு அனைத்து தமிழ் பத்திரிகைகளும் தைரியமாக துணை வரலாம். சிண்டு முடித்துவிடுவதே பத்திரிகைகளின் வேலை என்ற பத்திரிகைகளின் கெட்ட பெயரை துடைப்பதற்கு அவர்களே இந்த நல்ல காரியத்திற்கு வெளிச்சம் போட்டு செய்திகளை பிரசுரிக்கலாம். இந்தப் பத்திரிகைகள் யாரை நம்பி பிரசுரமாகிறது. இந்த மக்களை நம்பித்தானே. இந்தப் பத்திரிகைகளால் எதுவும் முடியும். பத்திரிகைகள் கண்ணுக்குத் தெரிந்த ஒரு வல்லவன். இது பத்திரிகைகளுக்கும் தெரியும். எதுவும் முடியாததில்லை.

– ஊரணி