புதிய என்ஜிஓ பக்காத்தான் விவகாரங்களையும் அலசி ஆராயும்

தவறுகளைக் கண்காணிக்கவும் அவை பற்றித் தகவல் அளிக்கவும் அமைக்கப்பட்டிருக்கும் புதிய அரசுசாரா அமைப்பான  National Oversight and Whistleblowers (NOW) பிகேஆர் தொடர்புள்ளது என்றாலும் பக்காத்தான் ரக்யாட் ஊழல்களையும் அது விட்டு வைக்காது, அலசி ஆராயும்.

“மற்றவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதுபோலவே பக்காத்தானிடமும் நடந்துகொள்வோம்.

“ஆனால் புகார் சொல்பவர்கள் ஆதாரங்களைக் காண்பிக்க வேண்டும். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஏற்க மாட்டோம். அதற்கெல்லாம் நேரம் இல்லை”, என்று அந்த என்ஜிஓ தலைவர் ரபிஸி ரம்லி கூறினார்.

பிகேஆர் வியூக இயக்குனருமான ரபிஸி, இன்று காலை சுங்கை பீசியில் அந்த என்ஜிஓ-வைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.

ரபிஸி,  நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) ஊழல் விவகாரம் பற்றித் தகவல் வெளியிட்டதற்காக நீதிமன்ற வழக்கை எதிர்நோக்கியுள்ள தருணத்தில் அந்த என்ஜிஓ தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. என்எப்சி அதற்கு இறைச்சி உற்பத்திக்காக வழங்கப்பட்ட ரிம250 மில்லியனை நிலம் வாங்குவதற்கும் ஆடம்பர கொண்டோமினியம் வாங்குவதற்கும் செலவிட்டிருப்பதை அம்பலப்படுத்திய விவகாரம் தொடர்பில் ரபிஸிமீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

TAGS: