55ஆவது மெர்டேக்காவும் தனியாத சுதந்திரத் தாகமும்!

“நள்ளிரவில் வாங்கினோம் விடுதலை, இன்னும் விடியவில்லை” என்றவன் வாயிற்கும் வயிற்றுக்கும் தன்மானத்தோடு போராடும் மக்களில் ஒருவனாக இருக்க வேண்டும். [காணொளி]

நமது நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை அடைந்து 55 ஆண்டுகள் நிறைவடையும் தருணம் இது. இன்று நம்மில் பெரும்பான்மையோர் விடுதலை மலேசியாவில் பிறந்த மக்கள்.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் ஒழிந்த பிறகு, நமது நான்கு வண்ணக்கொடி விண்ணோடு விளையாட விடுதலை மலேசியாவின் காற்றை சுவாசித்து நாம் வளந்தோம். இந்த மண் இனி நம்முடையது, இதில் விதைக்கப்படும் நமது உடல்கள் மீண்டும் உயிர்பித்து எழும்போது அவை சுவாசிக்கும் காற்று நமது பெருமூச்சிகளால் உள்வாங்கப்பட்ட அதே மண் வாசனையில் இந்த நாட்டின் உறவோடு சங்கமித்திருக்கும்.

துடைப்பத்துடன் குடும்ப சுமையை சுமந்துகொண்டு பேரங்காடிகளில் பெருக்கும் அங்கம்மாவும், தொழிற்பேட்டையின் வாயிலில் கனத்த காக்கி சீருடையில் தள்ளாத வயதிலும் நாள் சம்பளத்திற்கு சலாம் போடும் கோபாலும், வேலை கிடைக்காத விரக்தியில் விரைவு உணவுக் கடைகளில் மேசை துடைக்கும் மீனாவும், தொழில் கல்விக்கற்றும் தொழிற்பேட்டையில் அயல் நாட்டு தொழிலாளி அந்தஸ்தில்   அடிமைபோல் பணிபுரியும் வாசுவும் விடுதலை மலேசியாவின் அன்றாட அங்கங்கள்; நமது உடன் பிறப்புகள்.

செல்வமும் வளமும் உள்ள நமது நாட்டின் சொத்து நமக்கு சேர வேண்டிய வகையில் பங்கிடப்படாமல், அரசியலின் அதிகாரத்தை கொண்டு அவை சுரண்டப்பட்டு சூரையாடப்பட்டு வருவதால், இன்று இந்தியர் என்று நாம் மட்டும் அல்லாமல் மலாய்க்காரர்களிடையே 68 சதவிகித குடும்பங்கள் 2,500 வெள்ளிக்கு குறைவாக வருமானம் பெறுகிறார்கள். இருப்பினும் இந்த வறுமையின் தாக்கம், அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டுவரும் இந்தியர்களைதான் வெகுவாக தாக்குகிறது.

சூரையாட வந்த ஆங்கிலேயர்களை விரட்டியடிக்க முன்னின்ற போரட்டவாதிகளின் வரலாறு நமக்கு முழுமையாக தெரிய வாய்ப்பில்லை. ஆங்கிலேயர்களால் சூனியமாக வழங்கப்பட்ட விடுதலை இனவாத பிரிவினையின் பின்னணியில் பொருள் முதல்வாத கொள்கையை நிலைப்படுத்தியது. அதில் நாட்டு மக்களாக தோட்ட மக்கள் இருந்தும் அவர்கள் தனியார் தொழிலாளர்கள் என்ற வகையில் கசக்கிப் பிழியப்பட்டனர். அதன் தாக்கம் 54 ஆண்டுகளுக்குப் பின்பும் தொடர்கிறது.

தேசிய கீதத்தை நிமிர்ந்த நெஞ்சோடு பாடும் போது நமக்குதான் எவ்வளவு பெருமை! ஆம், நமது நாட்டின் விடுதலை என்பது அந்த பெருமையை நமக்கு உண்மையாகவே கொடுக்க வேண்டும். அந்நிலை உருவாக நாம் நம்மை சுரண்டுபவர்களையும் சூரையாடுபவர்களையும் விரட்டி அடிக்க வேண்டும். அப்போதுதான் நமது சுதந்திர தாகம் தனியும்.

– செம்பருத்தி

உனதுரிமை இழக்காதே! பிறருரிமை பறிக்காதே!

TAGS: