மலேசியக் கல்விச் சீர்திருத்த திட்டம் மீது ‘பொறாமை’

நாளை வெளியிடப்படவிருக்கும் மலேசியாவின் புதிய கல்விப் பெருந்திட்டத்தை பாராட்டியுள்ள பல அந்நிய நிபுணர்களில் தென் கொரிய முன்னள் கல்வி அமைச்சரும் ஒருவர் ஆவார்.

அந்தச் சீர்திருத்தத் திட்டம் தமது நாடு இது வரையில் அமலாக்க முயலாத ஒன்று என பியோங் மான் ஆன் என்ற அவர் இன்று நிருபர்களிடம் கூறினார்.

“உங்கள் நாடு இப்போது செய்வதைக் கண்டு நான் மிகவும் பொறாமைப்படுகிறேன். அந்த திட்டம் மிக மிகப் பெரியது. மிகவும் விவரமானது. நாங்கள் கொரியாவில் இதற்கு முன்பு அதனைச் செய்தது இல்லை.”

அந்த கல்விப் பெருந்திட்டம் பற்றி கல்வி அமைச்சர் முஹைடின் யாசினை சந்தித்துப் பேசிய பின்னர் ஆன் நிருபர்களைச் சந்தித்தார்.

அனைத்துலக அளவில் போட்டியிடும் ஆற்றலைக் கொண்ட மாணவர்களை உருவாக்குவது அந்த திட்டத்தின் தலையாய நோக்கமாகும்.

கடந்த எட்டு மாதங்களில் அந்த திட்டம் மீது கலந்தாய்வு நடத்தப்பட்ட பல அனைத்துலக நிபுணர்களில் ஆன் -ம்  ஒருவர் ஆவார். அந்தத் திட்டம் “கல்விச் சீர்திருத்தத்தின் முக்கியமான அம்சங்களை உள்ளடக்குவதற்குப் போதுமானது,” என அவர் சொன்னார்.

திட்டமிடப்பட்ட இலட்சியங்களை அடைவதற்கு “அறிவு சார்ந்த கேள்விகளை தொடுக்கவும் அறிவியல் ரீதியிலான அணுகுமுறைகளைப் பின்பற்றவும்” போதுமான நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் அந்த முன்னாள் தென் கொரிய அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆன், தற்போது தென் கொரியாவில் கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் மீது அதிபருக்கு ஆலோசனை கூறும் மன்றத்தின் உதவித் தலைவராகப் பணியாற்றி வருகின்றார்.

‘வெற்றி அதன் அமலாக்கத்தைச் சார்ந்துள்ளது’

இன்று முஹைடினைச் சந்தித்தவர்களில் சிங்கப்பூர் தேசியக் கல்விக் கழகத்தின் இயக்குநர் லீ சிங் கொங்-கும் ஒருவர் ஆவார்.

பெற்றோர்கள் உட்பட சம்பந்தப்பட்ட தரப்புக்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் தம்மை மிகவும் கவர்ந்து விட்டதாக அவர் சொன்னார். அந்தக் கருத்துக்கள் கல்விப் பெருந்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

அந்தத் திட்டத்தில் “உயரிய அடைவு நிலைகளைக் கொண்டுள்ள முறைகளின்” சிறந்த நடைமுறைகள் அடங்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், அவற்றுள் கற்பிக்கும் தரமும் அடங்கும் என்றார்.

அந்தப் பெருந்திட்டத்துக்கு புகழாரம் சூட்டிய லீ, அதன் வெற்றி அமலாக்கம் நல்ல முறையில் மேற்கொள்ளப்படுவதைச் சார்ந்துள்ளதாகவும் எச்சரித்தார்.

“அதன் அமலாக்கம் பற்றி விவாதிப்பது அமைச்சைச் சார்ந்ததாகும்,” என்றார் அவர்.

OECD அமைப்பின் கல்விப் பிரிவில் குறியீடுகள் ஆய்வுகள் பகுதிக்கு தலைவராக இருக்கும் Andreas Schleicher, கனடிய கல்வி அமைச்சருக்கான கல்விச் சிறப்பு ஆலோசகர் மைக்கல் புல்லான் ஆகியோர் இன்றைய சந்திப்பில் கலந்து கொண்ட மற்ற வல்லுநர்கள் ஆவர்.