பிகேஆர்: கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கியதற்காக என்எப்சி-யை விசாரியுங்கள்

முன்னாள் அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் குடும்பத்துக்கு சொந்தமான சர்ச்சைக்குரிய என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கியதற்காக விசாரிக்கப்பட வேண்டும் என எதிர்த்தரப்பான பிகேஆர் கட்சி விரும்புகிறது.

என்எப்சி, கால் நடைகள் கொள்முதலுக்கு சகோதர நிறுவனங்களைப் பயன்படுத்தி நிகழ்ந்துள்ள சட்ட விரோதமாக பரிவர்த்தனைகளில் சம்பந்தப்பட்டுள்ளது என்றும் அது கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்கு எதிரான சட்டத்தை மீறுவதாகும் என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறுகிறார்.

கால் நடைக் கொள்முதலுக்கு பணம் கொடுக்க சகோதர நிறுவனமான  National Meat & Livestock Corporation (NMLC) என்எப்சி வெளியிட்ட கடன் உத்தரவாதக் கடிதத்தை ( letter of credit ) பயன்படுத்தியுள்ளது என அவர் கூறிக் கொண்டார்.

ஆனால் அந்தக் கொள்முதல் Global Biofuture Pte Ltd என்ற நிறுவனம் மேற்கொண்டதாகும். இந்த நிறுவனமும் ஷாரிஸாட் குடும்பத்துக்கு சொந்தமான இன்னொரு நிறுவனம் ஆகும்.

“எப்படி ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்தின் பொருள் விவரப் பட்டியலைக் கொண்டு பணம் கொடுக்க  முடியும் ? இது NMLC-க்கும் Global Biofuture-க்கும் இடையில் நிகழ்ந்துள்ள சட்டவிரோதமான நிதி மாற்றமாகும்.”

“இது நிச்சயம், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்கு எதிரான சட்டத்தை மீறியதாகும்,” என்றும் ராபிஸி சொன்னார்.

பணம் சுயேச்சையாக மாற்றப்பட முடியாது

அவர் இன்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிகேஆர் தலைமையகத்தில் நிருபர்களிடம் பேசினார்.

ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியான அமைப்புக்களாகும். அவற்றுக்குத் தனித்தனி கணக்குகள் உள்ளன. அந்த நிறுவனங்கள் ஒரே மனிதர்களுக்கு சொந்தமானதாக இருந்தாலும் அவற்றுக்கு இடையில் சுதந்திரமாக மாற்றப்படக் கூடாது என்றார் அவர்.

நிறுவனங்கள் தங்களுக்கு இடையில் பொருத்தமற்ற முறையில் பணத்தை மாற்றிக் கொள்வதைத் தடுக்கும் பொருட்டே கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்கு எதிரான சட்டம் தயாரிக்கப்பட்டதாக ராபிஸி சொன்னார்.

“இல்லை என்றால் பயங்கரவாதிகளும் கிரிமினல் சக்திகளும் நிதிகளை மோசடி செய்கின்றவர்களும் அதனைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்வர்.”

இதில் மிகவும் கடுமையானது என்னவென்றால் என்எப்சி விஷயத்தில் அது அரசாங்க நிதி உதவியைப் பெற்ரிருப்பதால் பொது நிதிகள் சம்பந்தப்பட்டுள்ளதாகும் என்றும் ராபிஸி குறிப்பிட்டார்.

 

TAGS: