டிஏபி தவிர்த்து எதற்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள்:பிசிஎம் கோரிக்கை

அண்மையில் பேராக்கில் ஒரு நிகழ்வில் டிஏபி உறுப்பினர்கள் “பண்பாடற்ற முறையில் அநாகரிகமாக நடந்துகொண்டார்கள்”என்பதால் அவர்களுக்கு வாக்களிக்குமுன்னர் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும் என்று பார்டி சிந்தா மலேசியா(பிசிஎம்) வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

மக்கள் “டிஏபி-யைத் தவிர்த்து வேறு எதற்கும்” வாக்களிக்கலாம் என்று மொழிந்த பிசிஎம் உதவித் தலைவர் ஹுவான் செங் குவான், அக்கட்சி குறிப்பாக பினாங்கில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்றார்.

எதிர்வரும் தேர்தலில் பிஎன்/அம்னோவுக்கு எதிராக இயக்கம் நடத்தி ஆளும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்போவதாகக் கூறிக்கொண்டிருக்கும் ‘அம்னோ தவிர்த்து எதுவும்’ என்ற தரப்பைக் கிண்டல் செய்யும் வகையில் ஹுவான் இவ்வாறு கூறினார்.

அம்னோவையும் பெர்காசாவையும் காலிக்கும்பல்கள் என்று கூறும் டிஏபி  மேலான கட்சி அல்ல என்றாரவர். 

ஈப்போ, தாமான் காயாவில் டிஏபி ஆதரவாளர்கள், அப்பகுதியில் ஒரு ஆய்வில் ஈடுபட்டிருந்த சுயேச்சை ஊடகவியலாளர்களிடம் முரட்டுத்தனாமாக நடந்துகொண்டார்கள் என மீடியா பேரா வலைத்தளத்தில் வெளிவந்த செய்தியை மேற்கோளாகக் காட்டினார் ஹுவான்.

“இப்படிப்பட்ட செயல்களைக் கொண்டுதான் புத்ரா ஜெயாவை ஆள விரும்புகிறார்களா?திமிர் பிடித்த அவர்களுக்கு வாக்காளர்கள் நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்”, என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஜனநாயகத்தையும் பேச்சுரிமையையும் கடைப்பிடிப்பதாக டிஏபி  கூறிக்கொள்கிறது ஆனால், அப்பகுதியில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் தில்லுமுல்லுகளை விசாரிக்க ஒரு குழு சென்றபோது அவர்களை டிஏபி ஆதரவாளர்கள் மிரட்டியுள்ளனர்.

“இதுதான் டிஏபி-இன் செயல்படுமுறை.கேள்வி கேட்டால் சுய உருவைக் காண்பித்து மற்றவர்களை மிரட்டத் தொடங்கி விடுகிறார்கள்”, என்று ஹுவான் கூறினார்.

இனவாதிகள் மூளை அற்றவர்கள்’

டிஏபியின் இணையத்தள ஆதரவாளர்களையும் அவர் சாடினார்.அவர்கள் “கொடியவர்கள், தீய நோக்கம் கொண்டவர்கள்” என்றும்  “இனவாதிகள் போலவும் மூளை-அற்றவர்கள் போலவும்” நடந்துகொள்கிறார்கள்.

“டிஏபி அல்லது பக்காத்தான் ரக்யாட்டுடன் ஒத்துப்போகாதவர்களைத் துரோகிகள், கட்சிமாறிகள், தவளைகள் என்கிறார்கள்.பிஎன்னைச் சேர்ந்த எம்பிகள் அவர்களுடன் சேர்ந்துகொள்ளும்போது அவர்களை வெற்றி வீரர்கள், ஜனநாயகக் காவலர்கள் என்றெல்லாம் போற்றுகிறார்கள்.இது என்ன நியாயம்?”.

பினாங்கில் டிஏபி ஆட்சி பற்றிக் கருத்துரைத்த ஹுவான், ஒரு மாநிலத்தை எப்படி மேம்படுத்துவது என்றே அக்கட்சிக்குத் தெரியவில்லை என்றார். 

அரசு நிலத்தை விற்பதும் மலைகளை வெட்டிச் சரிப்பதும்தான் மேம்பாடு என்று நடப்பு நிர்வாகம் நினைத்துக்கொண்டிருப்பதாகக் கூறிய ஹுவான், முன்னேற்றம் காண அதுவா சரியான வழி?”என்று வினவினார்.

முன்னாள் பினாங்கு கெராக்கான் உதவித் தலைவரான ஹுவாங், பினாங்குமக்கள் பிசிஎம்முக்கு அதிகாரம் வழங்கினால்,அது அதிகாரத்தை மக்களிடமே திருப்பிக் கொடுக்கும் என்றார்அதன் பின்னர் .மக்கள் தங்களுக்குச் சிறந்தது எது என்பதைத் தாங்களே முடிவு செய்துகொள்ளலாம்.

“மக்கள்தான் எஜமானர்கள்.நாங்கள் அவர்களின் பணியாளர்கள்”, என்றாரவர்.

“பிசிஎம்முக்கு வாக்களியுங்கள். நாங்கள் விசுவாசிகள்,பரிவான உள்ளம் கொண்டவர்கள், முன்னேறிக் கொண்டிருப்பவர்கள். உங்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க எங்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள்”,என்றவர் வேண்டிக்கொண்டார்.

 

 

TAGS: