ஐநா பேராளர்: பேரணிகள் அமைதியாக நிகழ்வதை உறுதி செய்வது அரசாங்கத்தின் வேலை

ஆர்ப்பாட்டங்களின் போது ஏற்படும் சேதங்களுக்கு ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்கின்றவர்களை நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ள சில நாடுகளில் மலேசியாவும் ஒன்று என அமைதியாக ஒன்று கூடுவதற்கான ஐநா சிறப்பு அனுசரணையாளர் மைனா கியாய் வருத்தமுடன் தெரிவித்துள்ளார்.

“இது முழுக்க முழுக்க மனித உரிமைகள் தரத்துக்கு எதிரானது ஆகும். ஏனெனில் ஒன்று கூட விரும்புகின்றவர்கள் அதனை அமைதியாகச் செய்வதை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும்,” என அவர் கடந்த வாரம் மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

“பெர்சே3.0 பேரணி கையாளப்பட்ட விதம் மீது நாங்கள் (ஐநா அனுசரணையாளர்கள்) ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளோம். அந்த நிலையில் மாற்றமில்லை,” என நைரோபி பல்கலைக்கழகத்திலும் ஹார்வார்ட்டிலும் சட்டம் பயிப்ன்ற கியாய் சொன்னார்.

அவர் சுவாராம், வழக்குரைஞர் மன்றம் போன்ற பல அரசு சாரா அமைப்புக்களின் அழைப்பை ஏற்று கடந்த வாரம் மலேசியாவுக்கு வந்திருந்தார்.

சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கு அனுமதிப்பதால் பேரணிகள் அமைதியாக நிகழ்வதை உறுதி செய்யும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகி விட முடியாது என்றும் அவர் சொன்னார்.

கியாய் தமது குறுகிய கால வருகையின் போது தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமாரையும் சந்தித்தார்.

அனைத்துலகச் சட்டத்தின் கீழ் நிகழ்வுகளுக்கு அதன் ஏற்பாட்டாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என ஐநா சிறப்பு அனுசரணையாளர்கள் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“என்றாலும் சட்ட விரோத நடவடிக்கைகள் நிகழுமானல் அது அரசாங்கத்தின் பொறுப்பாகும். பேரணிகள் அமைதியாக நிகழ்வதை உறுதி செய்வது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமையாகும்.”

“பேரணியில் கலகக்காரர்கள் காணப்பட்டால் அவர்களை மனிதாபிமான முறையில் அகற்றி சட்டத்துக்கு இணங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்களால் முடியாவிட்டால் அந்தப் பொறுப்பைத் தனிப்பட்ட குடி மக்களிடம் விட்டு விடுங்கள்.’

போலீஸ் கவலை

இஸ்மாயிலுடன் தாம் நடத்திய சந்திப்பு ‘திறந்த மனதுடன்’ நடைபெற்றதாக குறிப்பிட்ட கியாய் அது குறித்து மனநிறைவு அடைந்துள்ளதாகச் சொன்னார்.

“பேரணிக்கு வருகின்ற அனைவரையும் ஏற்பாட்டாளர்களுக்குத் தெரியாது என ஐஜிபி சொன்னார். அது உண்மையே . என்றாலு குழப்பத்தை அல்லது சேதத்தை ஏற்படுத்த முயலுகின்றவர்களை தடுப்பது போலீசாரின் கடமையாகும்.”

“ஒரு கடையில் திருட்டு நிகழ்ந்தால் நீங்கள் கடைக்காரர் மீது பழி போட முடியாது. திருட வந்தவனே அதற்குப் பொறுப்பு,” என கியாய் சுட்டிக் காட்டினார்.

ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணி நிகழ்ந்தபோது ஏற்பட்ட சேதங்களுக்காக அரசாங்கமும் பெர்சே 122,000 ரிங்கிட் இழப்பீடு கோரி பெர்சே இணைத் தலைவர் எஸ் அம்பிகா மீதும் 2.0 பணிக் குழு மீதும் சிவில் வழக்குப் போட்டிருப்பது பற்றி அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

அம்பிகாவுக்கு எதிரான வழக்கை மீட்டுக் கொள்ளுமாறும் அவர் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.